இந்தியா

கேரளாவின் பாகீரதி, கார்த்தியாயினி பாட்டிக்கு மார்ச் 8 அன்று தேசிய விருது

டெல்லி

அசாத்திய கற்றலை நிகழ்த்திய கொல்லத்தைச் சேர்ந்த 105 வயது பாகீரதி அம்மா மற்றும் ஆலப்புழாவைச் சேர்ந்த 98 வயது கார்த்தியாயினி அம்மா இருவருக்கும் பெண்கள் தினத்தன்று மத்திய அரசின் நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது. இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார்.

105 வயதான பாகீரதி 

105 வயதான பாகீரதி அம்மா, கடந்த ஆண்டு கொல்லத்தில் நடைபெற்ற மாநில எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் தேர்வு எழுதி இருந்தார். அதில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, நான்காம் வகுப்புக்கு இணையான பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

அம்மா இறந்தவுடன் தனது 9 வயதில் 3-ம் வகுப்போடு படிப்பில் இருந்து நிறுத்தப்பட்டார் பாகீரதி அம்மா. இளம் வயதிலேயே திருமணமான அவர், தனது 30-வது வயதில் கணவனை இழந்தார். 6 குழந்தைகளை வைத்துக் கொண்டு குடும்பத்துக்காகப் பாடுபட்டார். குழந்தைகளைக் கரையேற்றிய பிறகு படிக்க ஆசைப்பட்டார்.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு எழுத்தறிவு இயக்கத்தின் துணையோடு படிக்க ஆரம்பித்தார். தேர்வில் வெற்றி பெற்றதை அடுத்து, பாகீரதி அம்மா தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகின.

96 வயது கார்த்தியாயினி

முன்னதாக 2018-ம் ஆண்டு ஆலப்புழாவைச் சேர்ந்த 96 வயது கார்த்தியாயினி எனும் பாட்டி அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவுத் தேர்வில் 98% மதிப்பெண்களைப் பெற்றார். தன்னுடைய இளமைக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத கார்த்தியாயினி பாட்டி, வீட்டு வேலை செய்து தன் பிழைப்பை நடத்தியவர். தனது 51 வயது மகள் அம்மணியம்மாவிடம் இருந்து படிக்கும் ஆசை அவருக்கு முளைத்தது.

பிரதமர் மோடி

மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இவர்களைப் பற்றிக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் மத்திய அரசின் சார்பில் 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இருவருக்கும் விருது வழங்குகிறார்.