தற்போதைய செய்திகள்

நாமக்கல்லில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி – அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

நாமக்கல்:-

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சமூக நலம்-சத்துணவுத் திட்டத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் போஷன் அபியான் – ஊட்டச்சத்து விழிப்புணர்வுக் கண்காட்சி மற்றும் பேரணி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான மருத்துவர்.வெ.சரோஜா ஆகியோர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டனர்.

இதில், மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் சார்பில் 30 அரங்குகள் அமைக்கப்பட்டு, ஊட்டசத்துகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பந்தல் காய்கறிகள், சிறுதானிய உணவுகள் உள்ளிட்ட பொருள்களையும், விழிப்புணர்வு பதாகைகளையும் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். ஊட்டசத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப்பட்டது.

இதனையடுத்து, போஷன் அபியான் திட்ட ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் பி.தங்கமணி, மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி வைத்தனர். இப்பேரணியில் ஊட்டச்சத்த்தின் அவசியம், கர்ப்ப கால பராமரிப்புகள், குழந்தைகள் பராமரிப்பு குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கும்மிப் பாடல்கள் பாடியும் ஆடியும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், நகர கழக செயலாளரும், தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர், கொல்லிமலை ஒன்றிய கழக செயலாளரும், சேந்தமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான சி.சந்திரசேகரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் இயக்குநர் ஆர்.கவிதா ராமு, இணை இயக்குநர் எஸ்.ரேவதி, துணை இயக்குநர் பேச்சியம்மாள், அங்கன்வாடி மையப் பணியாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.