திருவள்ளூர்

அனைவராலும் பாராட்டு பெற்ற சிறந்த தலைவர் பேரறிஞர் அண்ணா- சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேச்சு

திருவள்ளூர்:-

அனைவராலும் பாராட்டு பெற்ற சிறந்த தலைவர் பேரறிஞர் அண்ணா என்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி கழகம் சார்பில் தச்சூர் கூட்டு சாலையில் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமை வகித்து பேசியதாவது:-

நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த அண்ணாதுரை அரசியலில் இறங்குவதுற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். திராவிட கட்சி, திராவிட கழகம் மூலம் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த அண்ணாதுரை பிறகு தன்னுடைய ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற கட்சியை உருவாக்கினார். அரசியல் உலகில் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்கிய அண்ணாவின் மறைவிற்கு பின், இவரது பெயரால் “அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” (அதிமுக) என்ற கட்சியை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு தொடங்கினார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்று பணியை சிறப்பாக செய்த அண்ணாவின் புகழ் சாதாரண மக்களிடையே பெரும் புகழை தேடி தந்தது. அது மட்டுமல்லாமல் அனைவராலும் பாராட்டுப்பெற்ற ஒரு சிறந்த பேச்சாளராகவும், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய எழுத்தாளராகவும் மற்றும் ஒரு மேடை நாடகராகவும் புகழ் பெற்றார்.

அண்ணா மதராஸ் என்று இருந்ததை தமிழ் நாடு மாநிலமாக உருவாக்கினார். கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் நிலவும் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை தமிழகத்தில் அண்ணா அமல்படுத்தினார். 1968-ம் அண்டு “இரண்டாம் உலக தமிழ் மாநாடு” நடத்தப்பட்டது. 1968-ல் யேல் என்ற அமெரிக்க பல்கலைக்கழகம் அண்ணாவுக்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை அண்ணாவுக்கு வழங்கி கவுரவித்தது.

இந்த விருதை பெற்ற அமெரிக்க அல்லாத ஒரு இந்தியர் என்ற பெருமையை தேடித்தந்தது. பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக கவுரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை” என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிலை கூட அங்கு அமைக்கப்பட்டது.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசினார்.