தற்போதைய செய்திகள்

சென்னை மாநகரில் விரைவில் 50 ஏ.சி பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் 892 பேருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.219.80 கோடி மதிப்பிலான பணப்பயன்களை வழங்கினார்.

அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.5200 கோடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு போக்குவரத்துத்துறையில் தான் விபத்துக்கள் நடந்தன. ஆனால் இப்போது எடுக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 24 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் மிக விரைவில் 50 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. குறைவான தூரம் செல்லக்கூடிய பேருந்துகளும் விரைவில் ஏ.சி. பஸ்களாக இயக்கப்பட உள்ளது. சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வகையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த கே.எஸ்.டபிள்யு. என்ற வங்கியின் மூலம் மிக குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி பெற்று 2000 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மொத்தம் 820 மின்சார பேருந்துகள் ஓராண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படும். சென்னையில் குறுகலாக உள்ள சாலைகளிலும் பஸ்களை இயக்க வேண்டும் என்ற வகையில் மினி பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த திட்டத்தை விரைவில் மதுரை மற்றும் கோவை மாநரங்களிலும் விரிவுபடுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.