மதுரை

அம்மா வழியில் பெண்கள் முன்னேற்றத்துக்கு முதலமைச்சர் எடப்பாடியார் பாடுபடுகிறார்- வி.வி.ராஜன்செல்லப்பா பெருமிதம்

மதுரை

அம்மா வழியில் பெண்கள் முன்னேற்றத்துக்கு முதலமைச்சர் எடப்பாடியார் பாடுபடுகிறார் என்று மதுமர புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மேலூர் நகர கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா, மற்றும் அம்மா அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு மேலூர் நகர கழக செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.. மாவட்ட கழக அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், முன்னாள் அம்மா பேரவை செயலாளர் செல்வா இளங்கோ, நகர இளைஞரணி இளையராஜா, நகர மகளிர் அணி விஜயா அர்ஜுன், பள்ளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், கல்பனா கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

இக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

அம்மா ஒருவரை மட்டும்தான் தமிழக மக்களுக்கு புரட்சித்தலைவர் அறிமுகப்படுத்தினார். அவரது பிரச்சாரத்தை பார்த்து கொள்கை பரப்பு செயலாளராக எம்.ஜி.ஆ.ர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் திட்டங்களை கொண்டு வந்தவர் அம்மா.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 16 வகையான பொருட்கள் வழங்கும் திட்டத்தை அம்மா கொண்டு வந்தார்.காவேரி நதிநீர் பிரச்சினையில் தொடர் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டதோடு மத்திய அரசு அரசிதழிலும் வெளியிட செய்தார் புரட்சித்தலைவி அம்மா. இவரை போன்ற தலைவர்களுக்கு மட்டும் தான் இன்று பிறந்தநாள் விழா கொண்டாடி வருகிறோம்.

அம்மா வழியில் வந்த முதலமைச்சர் நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்திற்காக ரூ.78,796 கோடி ஒதுக்கீடு உள்ளார். அதேபோல் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.34,181 கோடியும், உள்ளாட்சித்துறைக்கு 23,000 கோடி ரூபாயும் மின்சாரத் துறைக்கு ரூ.20,000 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.11,894 கோடியும் ஒதுக்கி உள்ளார். புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருகிறார்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்த்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவாதவூர் அமமுக நிர்வாகிகள் 75 பேர் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.