தற்போதைய செய்திகள்

7000 அரசு பள்ளிகளில் விரைவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கம் : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

மதுரை

7 ஆயிரம் அரசு பள்ளிகளில் விரைவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்பக்கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சார்ந்த 320 மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு சரித்திர சாதனைகளை தமிழகத்தில் படைத்து, இந்தியாவே திரும்பி பார்க்கின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். பல ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் அண்டை நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் துவங்குவதற்கு அழைத்தது முதலமைச்சர் அவர்களையே சாரும். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விவசாய குடும்பத்தை சார்ந்தவராக இருந்ததால் தான், நீர் மேலாண்மையை கருத்தில் கொண்டு குடிமராமத்து திட்டத்தினை துவங்கி வைத்தார். கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை உலக நாடுகள் வியக்கின்ற வகையில் நிவாரண பணியினை மேற்கொண்டது நமது தமிழ்நாடு அரசு.

இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு சிறந்த மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ரூபாய் மூன்று லட்சத்து நானூற்றி முப்பத்தி ஒன்று கோடி அளவிற்கு தமிழ்நாட்டில் முதலீடுகள் வந்துள்ளன. அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சீரிய திட்டங்கள் மூலம் வாழ்க்கையை மேம்படுத்து வதற்காக பல்வேறு சிறப்பான திட்டங்கள் தொடர்ந்து கொண்டு வரப்பட்டு வருகின்றன.

பன்னிரண்டாம் வகுப்பு படித்த முடித்தவர்களுக்கே மடிகணினி வழங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்ற பொழுதே மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி வழங்கப்படுகிறது. இந்தாண்டில் சுமார் 15,42,000 விலையில்லா மடிக்கணினி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

8, 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு டேப் வழங்கவும், அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து வகுப்பறைகளும், கணினி மற்றும் இணையதள வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் சுமார் 7000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.நீதிபதி, கே.மாணிக்கம், பி.பெரியபுள்ளான் (எ) செல்வம், எஸ்.எஸ்.சரவணன், மெட்ரிக் பள்ளி இயக்குநர் முனைவர் ஆ.கருப்பசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பள்ளி நிர்வாகிகள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.