தற்போதைய செய்திகள்

ஸ்டாலினின் உளறலால் திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க. பயணம் – வைகைச்செல்வன் கடும் தாக்கு

ராணிப்பேட்டை

ஸ்டாலினின் உளறலால் திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க. பயணித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக செய்தித் தொடர்பாளருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அரசியலுக்கு வருகின்றபோதே மக்களுக்காக நான், மக்களால் நான் என்ற உறுதிமொழியோடுதான் அரசியலில் கால் பதித்தார். மக்கள் பணியில் தூய்மையும், அரசு பணியில் நேர்மையும் இருக்க வேண்டும் என நினைத்து செயல்பட துவங்கினார். சத்துணவு உயர்மட்ட குழு உறுப்பினர், கொள்கை பரப்பு செயலாளர், ராஜய்சபா உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், கழகப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர் என படிப்படியாக சுயமாக உழைத்து அரசியலில் முன்னேறியவர் புரட்சித்தலைவி அம்மா. தன் வாழ்க்கையிலும், பொது வாழ்விலும் எளிமையாகவும், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகவும் இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா.

அம்மா அவர்களின் அரசியல் வளர்ச்சி என்பது, அக்னியில் இருந்து மீண்ட பீனிக்ஸ் பறவையை போன்றதாகும். ‘அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடன் தமிழகத்தை திறம்பட வழிநடத்திய, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், தமிழக மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தெய்வத்தாயாக குடிகொண்டிருக்கிறார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் கட்டிக் காத்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த பேரியக்கத்தை உருக்குலைத்து, கழகத்தை பிளவுபடுத்த அதிகார துஷ்பிரயோகம் செய்து பித்துபிடித்து அலைந்தாலும், துரோகத்தை முன்வைத்து இன்னும் எத்தனை சித்து விளையாட்டுக்களை நடத்தினாலும் அவர்களின் அதிகார மமதை பலிக்கப் போவத்தில்லை. ‘எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற மனநிலையில் இருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் உளறல்களால், திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

தி.மு.க.வின் செயல்பாடுகள் என்பது ஒருபுறம் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து, மறுபுறம் மீத்தேனுக்கு எதிராக அறிக்கை, ஒரு பக்கம் மாநில சுயாட்சிக்கு கூக்குரல் என்று தீர்மானம், மறுபக்கமோ உணவுப் பாதுகாப்பு மசோதா, ஜி.எஸ்.டி போன்ற மாநில உரிமை பறிப்புக்கு அழையா விருந்தாளியாக சென்று ஆதரவு தெரிவித்து தீர்மானம், இப்படி உள்ளுக்குள் ஒரு முடிவு, ஊரை ஏய்க்க மற்றொரு முடிவு, உதட்டில் வெல்லம், உள்ளத்தில் நஞ்சு இவ்வாறாகத்தான் இருக்கும்.

மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு, மக்களிடம் ஊடுருவிச் செல்லும் விதம்தான் காலத்தால் அழியாத வெற்றிக்கும், புகழுக்கும் வித்திடுகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா என்கிற இருபெரும் ஆளுமைகளின் மறைவிற்குப் பிறகு, ஆலமர விழுதுகள் போல் கிளை பரப்பி, எத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும், யாராலும் வீழ்த்த முடியாத ஒரு சுயம்புவாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வானம், ஆட்சியின் செயல்பாடுகள் மீது எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் தி.மு.க என்பது தொட்டு விடும் தூரம்தான்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் பேசினார்.