சிறப்பு செய்திகள்

சொல்லாததையும் செய்வோம்: முதல்வர் அதிரடி

நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இன்று அடிக்கல் நாட்டி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது.

 

இந்த அரசு என்ன செய்தது என்று பலர் கேட்கின்றனர். இவ்வளவு பெரிய சாதனையை நாங்கள் சாதித்திருக்கின்றோம். எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர், இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளினால் வெளி மாநிலத்தவர்கள் தான் இங்கே வந்து படிப்பார்கள் என்ற தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள், அது அவ்வாறு அல்ல.

85 சதவீத இடஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள மொத்த மருத்துவ இடங்களில் 15 சதவிகிதம் மட்டுமே அகில இந்திய ஒதுக்கீடு மீதமுள்ள 85 சதவிகிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்குத்தான். அதுமட்டுமல்லாமல், அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவிகிதத்திலும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மருத்துவப் படிப்பிற்கான இடம் பெற முடியும் என்பதையும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவத்தில் உலகிலேயே உயரிய இடம் தமிழகம்

தாய்-சேய் நலம் மற்றும் குடும்ப நலத் திட்டங்களையும், நோய்களை தடுப்பதற்காகவும் பல முன்னோடி திட்டங்களை அம்மாவின் அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகிலேயே உயரிய மருத்துவ சேவை பெற வசதியுள்ள இடமாக தமிழ்நாடு மாநிலம் திகழ்கிறது என்பதை பெருமையுடன் தெரிவிக்க விரும்புகிறேன். புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வெளியிடப்பட்ட ‘தொலை நோக்குத் திட்டம் 2023’-ல், வளர்ந்த நாடுகள் அடைந்த சுகாதாரக் குறியீடுகளை, 2023ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்கான முயற்சியை அம்மாவினுடைய அரசு எடுத்து வருகிறது.

மிகுந்த அக்கறை

பேறுகாலங்களில், தாய்மார்கள் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் போன்ற சுகாதார குறியீடுகளில் ஐக்கிய நாடுகளின் மில்லினியம் வளர்ச்சி இலக்குகளை நமது மாநிலம் ஏற்கனவே அடைந்து விட்டது. தமிழ்நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பதில், அம்மாவின் அரசு மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டதினால், கடந்த 8 ஆண்டுகளில் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல 6 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

பெரிய சாதனை

மேலும், இந்த நிதியாண்டில் மட்டும், புதியதாக 11 மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் நிதி உதவியோடு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு, இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை 17 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கிய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.
நாங்கள் செய்வதைத் தான் சொல்வோம். சொல்வதைத் தான் செய்வோம். சில சமயங்களில், மக்கள் நலன் கருதி, சொல்லாததையும் செய்வோம்.இவ்வாறு பேசினார்.