தற்போதைய செய்திகள்

பேரிடர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் – மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

மதுரை :-

பேரிடர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மதுரையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க பேரிடர் மீட்பு துறையின் சார்பில் பேரிடர் மீட்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மூலம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கல்லூரிகள் தோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலத்தின்போது பொதுமக்களை எப்படி மீட்பது என்பது குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் டேவிட்சன் ஆசீர்வாதம், தென்மண்டல காவல்துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன், பேரிடர் மேலாண்மை இயக்குனர் ஜெகநாதன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் பல்வேறு விபத்துகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்றும், மழைக்காலங்களில் எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என்றும், கனமழை, புயல்மழை போன்ற பேரிடர் காலங்களில் எப்படி முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து செயல்படுவது என்றும், பராமரிப்பில்லாத மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளில் விழுந்தவர்களை எப்படி மீட்பது போன்ற பல்வேறு செயல் விளக்கங்களை மாணவர்களும், துறை சார்ந்தவர்களும் செய்து காட்டினர். அதனைத்தொடர்ந்து பொம்மலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலமும் மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார். அவருக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஜா புயல் ஏற்பட்டது. புயல் தாக்கத்தை முன்கூட்டியே உணர்ந்த முதலமைச்சர் புயலால் எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்று எங்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நாங்களும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கை செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதால் கஜா புயலால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கேரளாவில் இயற்கை சீற்றம் ஏற்பட்டபோது மக்கள் பலியானார்கள்.

தற்போது கூட முதலமைச்சர் மாணவர்கள் மூலம் பேரிடர் காலங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால் எந்த சேதம் வராது என்று நினைத்து இதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மாணவர்கள் நினைத்தால் இரும்பை கூட வில்லாக வளைக்க முடியும். ஆகவே முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் நல்லாசியுடன் உங்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் தொடர வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.