தற்போதைய செய்திகள்

உயர் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலம் – முதலமைச்சர் பெருமிதம்

நாமக்கல்

உயர் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்தை திறந்து வைத்து ஆற்றிய உரை வருமாறு:-

கிராமங்களிலிருந்து நகர்ப்பகுதிகள் வரை ஏழை மாணவ, மாணவிகள் கல்வி கற்கத் தகுதியானவர்களாக இருந்தாலும், பொருளாதார சூழ்நிலை காரணமாக உயர்கல்வி கற்க இயலாத சூழ்நிலையை மாற்றி, அவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி கற்க வேண்டுமென்ற தொலைநோக்குச் சிந்தனையோடு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாடு முழுவதும் 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அவர்கள் வாழ்ந்த காலத்திலே அர்ப்பணித்துச் சென்றார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கையின் அடிப்படையில், அம்மாவின் அரசு தற்பொழுது மேலும், 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் வழங்கியுள்ளது.

2011-ம் ஆண்டு அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபொழுது 34 சதவிகிதமாக இருந்த உயர்கல்வி படிக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை, அம்மா அவர்கள் கல்வித்துறையில் எடுத்த முயற்சிகள், புரட்சியின் விளைவாக இப்பொழுது 49 சதவிகிதமாக உயர்ந்து இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி பயிலத் தேவையான உபகரணங்களை வாங்கித் தருகிறார்களோ இல்லையோ, இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெறாத தாயாக இருந்து அக்குழந்தைகளுக்கு சிறப்பான, அறிவுபூர்வமான கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக சுமார் 12 ஆயிரம் மதிப்புள்ள விலையில்லா மடிகணினியை கொடுத்து, விலையில்லா சைக்கிள், புத்தகம், புத்தகப் பை என பல்வேறு கல்வி உபகரணங்களை கொடுத்து ஏழை, மாணவ, மாணவிகள் கல்வி கற்க அடித்தளமாக விளங்கினார்.

ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் படிப்படியாக தரம் உயர்த்தியும், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வழங்கியும், உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு மற்ற துறைகளை காட்டிலும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஏழை, மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை உயர்த்த அம்மா அவர்கள் வழியில் செயல்படும் அரசு எங்கள் அரசு.

கல்வியில் சிறக்கின்ற மாநிலம் தான் அனைத்து வளங்களும் பெறும். அங்கே அமைதி, பண்புகள் நிலவும், உயர்வு கிடைக்கும். இவ்வாறு அனைத்தும் கிடைக்கின்றபோது பொருளாதாரம் தானாக வந்து சேரும். ஆகவே, அறிவுத்திறன் மிக்க மாணவர்களை உருவாக்க எங்களுடைய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, இந்தப் பகுதி மக்கள் இந்தக் கல்லூரியை நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைத்து, மேலும், மேலும் பல்வேறு சிறப்புகளைப் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.