தற்போதைய செய்திகள்

ஆற்றங்கரையோரம் திடக்கழிவுகளை கொட்டும் லாரிகள் பறிமுதல் – அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்

ஈரோடு

ஆற்றங்கரையோரம் திடக் கழிவுகளை கொட்டும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி கோயில் கரடு பகுதியில் மேட்டூர் அணையின் வலது, இடது கரை பாசன வாய்க்கால், 9 ஏரிகள் மற்றும்தடுப்பணை புனரமைப்புப் பணிகள் உள்பட ரூ.59.19 கோடி மதிப்பிலான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. உலக வங்கி நிலவள நீர்வளத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் இப்பணிகளைசுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார்.

இதன் பின்னர் அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் சாயத்தொழிற்சாலைகள் சாயக்கழிவுகளையோ, திடக்கழிவுகளையோ ஆறுகளிலோ, ஆற்றங்கரையோரங்களிலோ கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த 7 ஆண்டுகளாக தேங்கியிருந்த 15 லட்சம் டன் சாயத் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. மீதியுள்ள திடக்கழிவுகளை அகற்றும்பணி நடைபெற்று வருகிறது. ஆற்றங்கரையோரங்களில் திடக்கழிவுகளை கொட்டும் லாரிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் லாரிகளின் நிறுவனங்களையும் கண்டறிந்து நிறுவனங்களின்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. என்.ஆர்.கோவிந்தராஜர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், மாசு கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் தட்சிணாமூர்த்தி,அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சரவணபவா, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராதா,பூதப்பாடி ஊராட்சி தலைவர் பி.ஜிமுனியப்பன், நெருஞ்சிப்பேட்டைபேரூராட்சி கழக செயலாளர் மாரியப்பன், ஒன்றிய மகளிரணி செயலாளர் மலர்கொடி நித்தியானந்தம், அவைத் தலைவர் நடராஜன், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.