தற்போதைய செய்திகள்

சேலத்தில் ரூ.56 கோடி மதிப்பில் சாலை பணிகள் – மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

சேலம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களிலும் ரூ.56 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தார்சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆணையாளர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களில் 2018-2019-ம் நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.56.42 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் மற்றும் பேவர்பிளாக் பதிக்கும் பணிகள் 307 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் கூறியதாவது:-

4 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் தார்சாலைகளுக்கு பதிலாக, பேவர்பிளாக் பதிக்கும் பணிகள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பேவர் பிளாக் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண். 59ல் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் இராபர்ட் ராமசாமி தெரு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் மற்றும் பேவர்பிளாக் பதிக்கும் பணிகள், ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் பாரதி நகர் 1,2 மற்றும் இந்திரா நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்து, பேவர்பிளாக் பதிக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் சிவசக்தி நகர் முதல் சீலநாயக்கன்பட்டி புறவழி சாலை வரை அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகள் பார்வையிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட அளவில் ஜல்லிகற்கள் தார் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. சாலைகள் சீரான அளவில் அமைக்கப்பட வேண்டும். மழைநீர் உடனடியாக வடியக்கூடிய வகையில் சாலை அமைப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட கால அளவிற்குள் அனைத்து பணிகளையும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோட்டம் எண்.45 ல் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருமணி நாளங்காடி கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் ஆர்.செந்தில்குமார், சுகாதார அலுவலர் கே.ரவிசந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.