தற்போதைய செய்திகள்

5039 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

தருமபுரி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கல்வி மாவட்டத்தில் 20 அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 5039 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.04 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஹீரோ பேனாக்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி, தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு 34,181 கோடியே 73 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உயர்கல்வியில் தமிழகம் முதலிடம் வகிப்பதற்கு, பல்வேறு சிறப்பு திட்டங்கள் மூலம் பள்ளிக்கல்வியில் இடைநிற்றலை தவிர்த்தது முக்கிய காரணமாகும்.

மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க அரசு 14 வகையான விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11-ம் வகுப்பில் 90.2 சதவீதமும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.21 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் 12,338 மாணவ, மாணவிகளுக்கு 4 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. பேருந்து வசதி இல்லாத கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில ஏதுவாக தொலைநோக்கு திட்டமாக மிதிவண்டி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் உயர்கல்விக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெற்றிபெற்று வருகின்றனர்.

கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தடையின்றி கல்வி பயில வேண்டும் என்பதற்காக 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 5,000 ரூபாய் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு அவர்கள் உயர்கல்விக்கு செல்லும் போது 6024 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்து பள்ளிக்கல்வியும், உயர்கல்வியும் பயில இந்த வாய்ப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது.பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை மாணவ, மாணவிகள் நல்லமுறையில் பயன்படுத்தி எதிர்காலத்தில் தங்களை மேன்மைபடுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அரங்கநாதன், காரிமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி பெரியண்ணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், கூட்டுறவு சங்கத்தலைவர் சரவணன், வட்டாட்சியர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், வெங்கடேஷ், கவுரி, தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.