தற்போதைய செய்திகள்

பெண்களின் வாழ்வு உயர அம்மா தான் காரணம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் புகழாரம்

நாகப்பட்டினம்

பெண்களின் வாழ்வு உயர புரட்சித்தலைவி அம்மா தான் காரணம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சந்தைப்பேட்டை கடைத்தெரு, மேலப்போலகம், வவ்வால் அடி உள்ளிட்ட பகுதிகளில்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தெருமுனை பிரச்சார கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. திட்டச்சேரி பேரூர்கழக செயலாளர் டி.எஸ்.அப்துல் பாசித், வரவேற்புரையாற்றினார். மாநில கூட்டுறவு வங்கி துணைதலைவர் எஸ்.ஆசைமணி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தலைமை கழக பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

தமிழ் மக்களுக்காக, தமிழ்மொழிக்காக, தமிழ் கலாச்சாரத்திற்காக உலகமே பாராட்டுகிற அளவிற்கு புகழ்பெறச் செய்தவர் அம்மா. தமிழக ஜீவாதார உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி பெற்றுத் தந்தவர் அம்மா. அதுபோல காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியார் பிரச்சனைகளுக்கு உச்சநீதிமன்றம் சென்று சட்டப் போராட்டம் நடத்தி உரிமையை பெற்றுத்தந்தவர் புரட்சித்தலைவி.

16 ஆண்டு காலம் மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த தி.மு.க. எதையும் செய்யாமல் லாபம் ஈட்டுபவர்களாக செயல்பட்டனர். காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு இறுதியில் எடப்பாடியார் வந்தபோது நிறைவேற்றப்பட்டது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததால் இன்றும் நம் தமிழக மீனவர் படும் கஷ்டத்திற்கும், உயிர், உடமைகள் இழப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கும் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இப்படியாக தொடர்ந்து நல்லதை யார் செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது நடைபெறும்

போராட்டங்களை தூண்டி விடுவது எளிது. அதில் பாதிக்கப்படுவது யார் என்று சிந்திக்க வேண்டும். ஆளும் கட்சி கொண்டு வரும் திட்டம் போதாது அதிகமாக வேண்டும் என்று கூறுவது எதிர்கட்சி. ஏழை எளிய மக்களுக்கு அரசு கொடுப்பதை திட்டம் போட்டு தடுப்பதா எதிர்க்கட்சி. அந்த வேலையை அதிகம் செய்கிறது தி.மு.க. இன்று தமிழ்நாட்டில் பெண்களின் வாழ்வு உயர்ந்துள்ளது, கல்வியில் தரம் உயர்ந்துள்ளார்கள் என்றால், அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

பின்னர் 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் குடும்பத்துடன் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் கழக, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, கூட்டுறவு சங்க தலைவர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் ஒன்றிய குழு துணைத்தலைவர் வி.திருமேனி நன்றி கூறினார்.