தற்போதைய செய்திகள்

வாவிபாளையத்தில் கால்நடை மருந்தகம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வாவிபாளையத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ரூ.32.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகம் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் புதிய கால்நடை மருந்தகத்தை் திறந்து வைத்து பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல்வேறு வகையான திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வந்தார். குறிப்பாக பெண்களின் நலனில் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட அம்மா அவர்கள் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக விலையில்லா ஆடுகள் மற்றும் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வந்தார். அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் மேற்கூறிய திட்டங்களை தொடர்ந்து வழங்குவதுடன் விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தினையும துவக்கி வைத்து தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இதன் பின்னர் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிபாளையம் ஊராட்சி துத்தேரிபாளையத்தில் புதிய கால்நடை கிளை நிலையம், நாச்சிபாளையம் ஊராட்சி நாச்சிபாளையத்தில் ரூ.32.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்தகம், பல்லடத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை, கே.அய்யம்பாளையம் ஊராட்சி கே.அய்யம்பாளையத்தில் கால்நடை கிளை நிலையம் ஆகியவற்றை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து 264 கிராமப்புற பெண்களுக்கு தலா 25 நாட்டுக்கோழிகள் வீதம் ரூ.4,87,080 மதிப்பிலான விலையில்லா நாட்டுக்கோழிகளையும் வழங்கினார். முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட கேத்தனூர் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டடத்தை திறந்துவைத்த அமைச்சர் ரூ.70.25 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டடம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சக்தியபாமா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, உதவி இயக்குநர் பிரகாசம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.