தற்போதைய செய்திகள்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் அனைத்து தர தொழிலாளர்களிடம் மனு பெறும் முகாம் நடைபெற்றது. வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அடையாள அட்டையை வழங்கி மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

அம்மாவின் அரசு உழைக்கும் தொழிலாளர்களை காக்கும் அரசாக உள்ளது. தமிழ்நாட்டில் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும் 1982-ம் ஆண்டு தமிழக அரசால் நல வாரியம் உருவாக்கப்பட்டது.

இந்த நலவாரியத்தில் கட்டுமானம் உள்பட 17 நலவாரியங்கள் உள்ளன. இதில் உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, திருமணம், விபத்து நிவாரண உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. உழைக்கும் தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்கள் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி தான் வழங்கப்பட்டது. அதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா.

மேலும் விபத்து நடந்த இடத்தில் மரணம் அடைந்தால் தான் இந்த ரூபாய் வழங்கப்படும் என்ற விதி இருந்தது. அந்த விதியை மாற்றி உழைக்கும் தொழிலாளர் விபத்து அடைந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்க்கும் போதோ அல்லது மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று பலன் அளிக்காமல் மரணமடைந்தால் அவர்களுக்கும் இந்த ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசாணையை அறிவித்தவர் அம்மா.

நல வாரியத்தில் உறுப்பினர்கள் இல்லாத உழைக்கும் தொழிலாளர்கள் பாதிப்படையும்போது அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு வந்திருக்கும் நீங்கள் அனைவரும் ஒரு உறுதிமொழி ஏற்க வேண்டும். ஒவ்வொருவரும் இதில் 100 பேரை உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் உங்கள் வாழ்வு மட்டுமல்லாது அவர்களது வாழ்வும் சிறக்கும்.

அம்மாவின் வழியில் வந்த முதலமைச்சர் தொடர்ந்து உழைக்கும் தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.தற்போது கூட மதுரைக்கு முதலமைச்சர் எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்கி தந்துள்ளார். அதேபோல் 11 மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். திரும்பிய திசையெல்லாம் இன்றைக்கு மருத்துவமனை உருவாக்கியுள்ளார். உங்களைப் போன்ற உழைக்கும் தொழிலாளர்களுக்கு இந்த மருத்துவமனை பயனுள்ளதாக இருக்கும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் செப்டம்பர் மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் துவங்கப்படும் என்று கூறியுள்ளார் ஆனால் எதிர்க்கட்சிகள் இதை குறை கூறி வருகின்றன.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வந்தவுடன் வராது என்று சொல்லிய திமுகவினர் மட்டுமல்ல ஸ்டாலினும் அங்கு வந்துதான் சிகிச்சை பெறுவார். குடியுரிமை சட்டத் திருத்தத்தை பற்றி மத்திய மாநில அரசுகள் பலமுறை விளக்கம் அளித்து விட்டது. எந்த மொழியிலும் குடியுரிமை சட்டத்தை பற்றி விளக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

திட்டங்களுக்காக செங்கலை கூட நகர்த்தாதவர்கள் அரசின் திட்டங்களுக்கு உரிமை கோருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் உங்களை போன்ற உழைக்கும் தொழிலாளர்கள் தலைநகர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் நீங்களும் உயர் சிகிச்சை பெறலாம். சிறுபான்மையின முஸ்லிம் பெண்ணைதான் தொழிலாளர் நலத்துறைக்கு அமைச்சராக புரட்சித்தலைவி அம்மா நியமித்து உள்ளார். பொதுவாக உழைக்கும் தொழிலாளிகள் உடலில் அக்கறை செலுத்துவது இல்லை, அதனால்தான் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி கூற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கோட்டாட்சியர் சவுந்தர்ய வல்லி, துணை ஆணையர் சுப்பிரமணி, உதவி ஆணையர் மயில்விழி செல்வி, மாவட்டக் கழக துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், நகர செயலாளர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.