தமிழகம்

அங்கீகாரம் பெறாமல் எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை:-

அங்கீகாரம் பெறாமல் எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எம் சாண்ட் என அழைக்கப்படும் நொறுக்கப்பட்ட கல்மணல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தரசான்றிதழ் பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் மத்திய மாநில துறைகளை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் தரச்சான்றிதழ் அளிக்கப்பட்டு வருகிறது.

எம் சாண்ட் தயாரிப்பு நிறுவனத்தில் அவசியம் பயன்படுத்த வேண்டிய இயந்திரங்கள்

1.        தாடை வடிவ நொறுக்கி

2.        கூம்பு வடிவ நொறுக்கி / இரண்டாம் நிலை தாடைவடிவ நொறுக்கி

3.        நேர்தண்டு தாக்கு விசை கருவி

4.        அதிர்வு சல்லடை
5.        நுண்துகள்களை கழுவி வெளியேற்றும் இயந்திரம்
6.        சல்லடை பகுப்பாய்வுக்கான ஆய்வகம்

7.        உற்பத்தியாகும் எம் சாண்ட் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் ஆகியவற்றை குறைந்த அளவு இரண்டு அரசு ஆய்வகங்களில் தரத்திற்கான அனைத்து விதமான ஆய்வக பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படும் எம் சாண்ட் நிறுவனங்களில், இக்குழுவால் இதுநாள் வரை 216 நிறுவனங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு, அதன் தகவல் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையிடம் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் விவரம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.தமிழ்நாட்டில் எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் துவங்கிய முப்பது (30) நாட்களுக்குள் மேற்கண்ட தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் பதிவு செய்து அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்பட வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் எம் சாண்ட் தயாரிப்பு செய்தால் அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப வல்லுநர் குழு தரச்சான்றிதழ் பெற்ற எம் சாண்ட் நிறுவனங்களிடம் மட்டுமே உபயோகப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தரச்சான்றிதழ் பெறாத நிறுவனங்கள் அளிக்கும் எம் சாண்ட் பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.