இந்தியா

கொரோனா வைரஸ் வதந்திகளை நம்பவேண்டாம்: பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி

கொரோனா வைரஸ் தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

உயிர்கொல்லி

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய உயிர்கொல்லி ‘கொரோனா வைரஸ்’ உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

ஹோலி பண்டிகை ரத்து

அதேபோல், மக்கள் அதிகம் கூடாமல் இருப்பதற்காக ஹோலி பண்டிகை நிகழ்ச்சியையும் ரத்து செய்தார். இந்நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், கொரோனா தொடர்பான என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டாம் என்ற செவிவழித் தகவல்கள், வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் டாக்டர்களை சந்தித்து கேளுங்கள் என அறிவுறுத்தினார்.

விழிப்புணர்வு

இதனிடையே, பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களை செல்போனில் அழைத்தால் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகளை தெரிவிக்கவும் உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.