தற்போதைய செய்திகள்

அனைவரது பாராட்டுகளை பெற்று உயர்ந்துள்ளோம்: முதல்வர் பெருமிதம்

நாகப்பட்டினம்

இன்று நாகப்பட்டினத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது

கடந்த மூன்று ஆண்டுகளாக அம்மாவின் அரசு, பல்வேறு தரப்பினரிடமிருந்து தினந்தோறும் வரும் சவால்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு, அவைகளை சமாளித்து, மக்களின் சேவையே மகேசன் சேவை என எண்ணி, பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி சாதனை புரிந்துள்ளது. அதன் பயனாக அம்மாவின் அரசு, மக்களுக்கான அரசு என பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும் தான் நம்முடைய தரத்தை, மதிப்பை உயர்த்துகின்ற அம்சங்களாகும். இதனை நினைக்கையில் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

பசு-பால்

பசுவின் பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் அடிவயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒரு பாத்திரத்தில் ஊற்றினார்கள். பின்னர், பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பின் மேல் வைத்து சூடாக்கினார்கள். எனக்கு சூடு தாங்கவில்லை. பசுவின் அடிவயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை என்று எண்ணி வருந்தினேன். பொங்கிய நிலையில் நான் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கப்பட்டேன். நேரமாக, நேரமாக மோர் என்னோடு சேர்க்கப்பட்டது. இது என்ன புது தண்டனை என வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப் பற்றி கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப் போனேன். எனக்கு தயிர் என்று புதிய பெயர் வைத்தனர்.

வெண்ணெய்

அத்துடன் மட்டும் நிறுத்தவில்லை, என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன். என்னுள் இருந்து ஒரு திடப் பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா இனியாவது என் வாழ்க்கை பெட்டர் ஆகுமா என்று ஏங்கினேன். ஆனால், அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டின் ஜன்னலுக்கு பக்கத்தில் வைத்தார்கள்.

பொருட்டாக தெரியவில்லை

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்னலுக்கு வெளியே இரண்டு பேர் பேசிக் கொண்டு செல்வதை கேட்டேன். நம் ஊர்லே பால் அரை லிட்டர் 18 ரூபாய் என்றும்,
நெய் விலை 250 ரூபாய் என்றும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்ட நான் ஆச்சரியப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 18 ரூபாய்தான். ஆனால் பல கஷ்டங்களை அனுபவித்து நெய்யான பிறகு என் மதிப்பு 250 ரூபாயாக கூடிவிட்டதே. இதை நினைக்கும்போது நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை என்றது அந்த நெய்.

சாதனையும்,சோதனையும்

சாதனை படைத்தவர்கள் அனைவரும் சோதனைகளை சந்தித்து அதனை சாதனையாக மாற்றியவர்கள்தான். அது போன்று அம்மாவின் அரசு பதவியேற்றது முதல் பல தரப்பிலிருந்து வந்த சவால்களையும், அவர்களால் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளையும், சோதனைகளையும் சந்தித்தபோதும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்று, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதனால், இன்று அனைத்து தரப்பு மக்களின் பேராதரவினைப் பெற்று, நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைத்து அனைவரது பாராட்டுகளையும் எங்களுடைய அரசு பெற்று உயர்ந்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.