தமிழகம்

ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.50 கோடியில் 7 வகுப்பறைகள்- ஆய்வுக்கூடம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 6.3.2020 அன்று தலைமைச் செயலகத்தில், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திருமதி கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 வகுப்பறைகள் மற்றும் 1 ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்தார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திருமதி கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் மூலமாக, அரசு பள்ளிகளுக்கு பள்ளிக் கட்டடங்கள் கட்டித் தருதல், ஏழை, எளிய மாணாக்கர்களின் உயர்கல்விக்காக ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குதல், ஆரணியில் உள்ள இலவச சிறுவர்கள் ஆதரவு இல்ல குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி அளித்தல், ஆதரவற்ற முதியவர்களுக்காக இலவச முதியோர் இல்லம், ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்தல் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகளை ஆற்றி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர், வேந்தர் ஏ.சி.சண்முகம், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார், ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயலாளர் ஏ.ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.