தற்போதைய செய்திகள்

மின் கணக்கீட்டாளர் பணிக்கு தமிழில் தேர்வு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல்

மின் கணக்கீட்டாளர் பணிக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், தனியார் தொண்டு நிறுவன பங்களிப்புடன், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்குதல் மற்றும் சிகிச்சை மையங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிகிச்சை பெறுவோர் காத்திருக்கும் அறை, பச்சிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை மையங்களை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி திறந்து வைத்தார். மேலும், அவர்களுக்கான அதிநவீன மருத்துவ உபகரணங்களையும், பச்சிளம் குழந்தைகளுக்கான செயற்கை சுவாச கருவி, இருதய ஸ்கேன் கருவி, குழந்தைகள்-பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலை சரி செய்யும் கருவிகள், செயற்கை சுவாச கருவி, குளுகோஸ் ஏற்றும் கருவி ஆகிய மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் வழங்கினார்

இந்நிகழ்ச்சிக்கு பின்னர், அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளதால் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த, தமிழக முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செங்கோட்டில் அரசு கல்லூரி அமைக்கப்படும். தமிழ்நாடு மின்சார வாரியத்தை தொழில்நுட்ப அளவில் மேம்படுத்த, பல்வேறு ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்கு அதிகாரிகளை அனுப்பி வைக்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தொடர் மற்றும் உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் தற்போது நான் வெளிநாடு செல்லவில்லை. அதிகாரிகள் அங்கு சென்று அதற்குரிய தொழில்நுட்பங்களை அறிந்து வருகிறார்கள்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டாளர் பணியிடத்திற்கு தேர்வு நடத்துவது மத்திய அரசின் சி-டாக் நிறுவனமாகும். அவர்கள் தொடக்கத்தில் ஆங்கிலத்தில் தேர்வு நடத்துவதாக அறிவித்தனர். ஆனால் அது இங்குள்ள விண்ணப்பதாரர்களை பாதிக்கும் என்பதால், தமிழில் தேர்வு நடத்த அந்த நிறுவனத்திடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து அந்த நிறுவனம் தமிழில் தேர்வு நடத்த ஆணை பெறப்பட்டுள்ளது. இதனால் மின் கணக்கீட்டாளர் பணியிடத்திற்கு தமிழில் தேர்வு நடத்தப்படும். எதிர்க்கட்சித் தலைவர் வைத்துள்ள கோரிக்கைக்கு முன்பாகவே, நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

தமிழகம் முழுவதும் அரசின் திட்டங்களில் கட்டுமான பணிகள் தரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் இம்மாவட்டத்தில் குறை இருப்பதுபோல புகார் கூறி வருகிறார். தினந்தோறும் பேப்பரில் செய்தி வர வேண்டும் என்பதற்காக தவறான தகவலை அளித்து வருகிறார். அவர் எந்த கட்டடத்தை வேண்டுமானாலும் ஆய்வு செய்து கொள்ளட்டும். அனைத்தும் தரமாக உள்ளன. விளம்பரத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறை கூறுகிறார்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

கள் இறக்குவதற்கு தடை நீக்கப்படுமா என்று செய்தியாளர் கேட்டதற்கு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.