தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் 5 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகம் முதலிடம் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பெருமிதம்

சென்னை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் 5 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2019-20 நிறைவு விழா சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேருரையாற்றினார். ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் முன்னிலை வகித்து பேசினார்.

இவ்விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசியதாவது:-

பலதரப்பட்ட தனிச்சிறப்பு பெற்ற சுற்றுலா வளம் பொருந்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சுற்றுலாவின் பல்வேறு கூறுகளான கிராமிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, சுற்றுச் சூழல் சுற்றுலா, சாகச சுற்றுலா, விளையாட்டுச் சுற்றுலா, வணிக சுற்றுலா, கல்வி சுற்றுலா மற்றும் மருத்துவச் சுற்றுலா ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு ஒரு முழுமையான சுற்றுலா மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. நவீன யுக்திகளைக் கையாண்டு சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், சுற்றுலா ஒரு முக்கிய வருவாய் ஈட்டி தரும் தொழிலாக கருதப்படுகிறது.

ஆன்மீக சிறப்பு மிக்க தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் அம்மா அவர்களின் ஆட்சியில், சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு அமைதி தவழும் மாநிலமாகவும், மின்மிகை மாநிலமாகவும், தொழில்கள் வளர்ச்சி அடைந்த மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குவதால், இந்தியாவிலேயே மிகவும் விரும்பத்தக்க சுற்றுலா மாநிலமாக விளங்குகிறது.

தமிழ்நாடு, தொடர்ந்து ஐந்தாண்டுகளாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி சுற்றுலாத் துறைக்கென தனி கவனம் செலுத்தி வருவதாகும். இச்சாதனை வருங்காலங்களிலும் தொடரும்.

இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசினார்.