தற்போதைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை தி.மு.க விரும்பவில்லை – கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

கடலூர்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை தி.மு.க. விரும்பவில்லை என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் கடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான செல்லஞ்சேரி, தூக்கணாம்பாக்கம், திருப்பணாம்பாக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கடலூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். கடலூர் நகர செயலாளர் ஆர்.குமரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் ஜி.ஜே.குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.ஆர்.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வ.அழகானந்தம் வரவேற்றார்.

அமைச்சர் எம்.சி.சம்பத் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-

தேர்தலுக்கு நாட்கள் மிகவும் குறைவாக உள்ளதால் வேட்பாளர்கள் அனைவரும் வீடு வீடாக சென்று அனைவரையும் சந்தித்து உடனடியாக வாக்கு சேகரிக்க தொடங்க வேண்டும். கழகத்தினர் அனைவரும் ஊராட்சியில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளை மறந்து அனைவரும் ஒன்றாக வாக்கு சேகரிக்க வேண்டும். கடந்த 2011 மற்றும் 2016 தேர்தலில் இங்கே பெருவாரியான வாக்குகளை பெற்றோம். தற்போது அதைவிட அதிகமான வாக்குகளை நாம் பெற வேண்டும். அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

திமுக இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை. இந்த தேர்தலை நிறுத்த திமுக வினர் அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அதை திறமையாக எதிர்கொண்டு உடைத்தெறிந்து விட்டார். அதனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் இப்போது நடைபெறுகிறது. 2021-ல் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அடிப்படையாக இந்த தேர்தலை நாம் எடுத்துக்கொண்டு களத்தில் பணியாற்ற வேண்டும். இங்குள்ள அனைவரும் சிறப்பாக பணியாற்றி இந்த ஊராட்சி ஒன்றிய வார்டுகளும் மாவட்ட ஊராட்சி வார்டுகளும் அண்ணா திமுகவின் அசைக்க முடியாத கோட்டை என நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இக்கூட்டத்தில் கீழ்அழிஞ்சிபட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.கே.ஆர்.ஜெயச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், ஊராட்சி கழக செயலாளர் வேலாயுதம், மாவட்ட ஊராட்சி 1-வது வார்டு வேட்பாளர் கல்யாணி ரமேஷ், இரண்டாவது வார்டு வேட்பாளர் தமிழ்ச்செல்வி ஆதிநாராயணன், ஊராட்சி ஒன்றிய வார்டு வேட்பாளர்கள் ஞானப்பிரகாசம், ஜெயலட்சுமி, தெய்வ பக்கிரி, கலைவாணி, கே.எஸ்.ராமசாமி, கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.