தற்போதைய செய்திகள்

சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு மானியம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரியில் வேளாண்மைத்துறை, பசுமை விகடன் மற்றும் தருமபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து நடத்தும் சிறப்பான லாபம் தரும் சிறுதானிய கருத்தரங்கு மற்றும் விதை திருவிழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது :-

தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. பருவ மழையை பெரிதும் நம்பியுள்ள இம்மாவட்டத்தில் மானாவாரியில் சோளம், ராகி, சாமை உள்ளிட்ட தானியங்களும், துவரை, தட்டை பயறு, கொள்ளு உளுந்து, கொண்டை கடலை உள்ளிட்ட பயறு வகைகளும் பெரிதளவில் விவசாயிகளால் பயிரிடப்படுகிறது.
நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுடன் மஞ்சள், தக்காளி, கத்தரி, பந்தல் காய்கறிகளும், சம்பங்கி, சாமந்தி மலர்களும் பயிரிடப்படுகின்றன.

தருமபுரி மாவட்டம் அனைத்து வகையான வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வதற்கான தட்பவெப்ப நிலை மற்றும் மண்வளம் கொண்ட மாவட்டமாக உள்ளது. தருமபுரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 3,42,998 ஹெக்டேரில், 2,04,537 ஏக்கர் பரப்பளவில் அனைத்து பயிர்களும், காரீப் மற்றும் ராபி பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 76,500 ஹெக்டேர் பரப்பு இறவையாகவும், 1,28,037 ஹெக்டேர் பரப்பு மானாவாரியாகவும் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இந்த ஆண்டு சிறுதானியங்கள் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 40 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை, சிறுதானிய பயிர்கள் சோளம் 41,330 ஹெக்டேர், ராகி 15,650 ஹெக்டர், மக்காச்சோளம் 2,540 ஹெக்டர், சாமை 3980 ஹெக்டேர் மற்றும் கம்பு 390 ஹெக்டர் பரப்பளவிலும் மொத்தம் 63,890 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சிறுதானியங்கள் உற்பத்தி 1 லட்சத்து 52 ஆயிரம் மெட்ரிக்டேன் என கணிக்கப்பட்டுள்ளது.

சிறுதானியத்தில் அதிக அளவில் உணவு சத்துக்கள் உள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். நமது பாரம்பரிய உணவு சிறுதானியம் மட்டுமே, பண்டைய காலத்தில் அரிசி உணவு, பண்டிகைக்கு மட்டும்தான். பெரும்பாலான மக்களின் அடிப்படை உணவு சிறுதானியங்கள் தான். இந்த மாசற்ற சிறு தானியங்களை சாப்பிட்டுதான் நமது முன்னோர்கள் நோய் நொடியில்லாமல் நெடுங்காலம் வாழ்ந்தார்கள். சமீப காலத்தில் நமது மக்களின் உணவு பழக்கம் மாறிக்கொண்டு வருகிறது.

அரிசி சாப்பாட்டிலிருந்து அனைவரும் சிறுதானியத்திற்கு மாறி வருகிறோம். சிறுதானியங்கள் சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து போன்ற அனைத்து தாது உப்புகள், வைட்டமின்கள் எனப்படும் உயிர் சத்துக்களும் அதிக அளவில் உள்ளது. இன்றைய நவீன மருத்துவ உலகம் சிறுதானியம் நீரிழிவு நோய், உடல் எடை குறைப்பு, புற்றுநோய், மூளை வளர்ச்சி, வயதாவதை தடுக்க, இரத்த அழுத்தத்தை குறைக்க மிக சிறந்த உணவு என அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது.

நமது முன்னோர்கள் “உணவே மருந்து – மருந்தே உணவு” என குறிப்பிட்டது சிறுதானிய உணவை தான். சிறுதானிய பயிர் சாகுபடிக்கு குறைந்த இடுபொருள் தேவை, நன்கு உழவு செய்து, காலத்தே விதைத்தால் போதுமானது மருந்தடிக்க தேவையில்லை, உரம்போட தேவையில்லை, நீர்ப்பாசனம் தேவையில்லை, இயற்கையாகவே விளைந்து அறுவடை செய்யலாம், சாகுபடி செலவு மிக மிக குறைவு.

தருமபுரி மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சான்று விதை விநியோகம், விதை விநியோகம், விதை உற்பத்தி மானியம் வழங்குதல், செயல்விளக்க திடல் அமைத்து பயிர் பாதுகாப்பு மருந்துகள் வழங்குதல் ஆகியவற்றிற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.265 லட்சம் மானியம் வழங்கப்பட்டு 4621 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இம்மாவட்டத்தில் சிறுதானிய விவசாயம் பெருக்கும் நோக்கில் 900 ஏக்கர் பரப்பளவில், 857 விவசாயிகளுக்கு கடந்த நான்கு வருடங்களில் ரூ.43 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இம் மாவட்டத்தின் சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் மூலம் 32,904 ஹெக்டேர் பரப்பில் சிறுதானியம் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் விதை கிராம திட்டத்தில் சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்க ரூ.54 லட்சம் மதிப்பில் 96 மெட்ரிக் டன் சான்று விதைகள் மானியத்தில் வழங்கப்பட்டு 2612 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல முக்கிய திட்டங்களின் விவரங்கள். தருமபுரி, காரிமங்கலம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் நல்லம்பள்ளி வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூபாய் 8 கோடியே 75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. பாப்பாரப்பட்டி அரசு விதைப் பண்ணையில் பண்ணை உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தருமபுரி வட்டாரத்தில் உரக்கட்டுப்பாடு ஆய்வகம் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.12 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் பயிர் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கூட்டுப்பண்ணை திட்டத்தில் 13,200 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளுக்காக ரூ.6 கோடியே 60 லட்சம் தொகுப்பு நிதி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 19 விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனக் கருவிகள் ரூபாய் 64 கோடியே 2 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் 280 விவசாயிகளுக்கு ரூ.28 லட்சத்து 87 ஆயிரம் செலவில் பல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 15 ஆயிரத்து 170 விவசாயிகளுக்கு ரூபாய் 9 கோடியே 6 லட்சம் செலவில் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.

2019-20-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம். விதை கிராமத் திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், தேசிய மானாவாரி நில மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்துவதற்காக கடந்த நான்காண்டுகளில் தருமபுரி மாவட்ட வேளாண்மைத் துறைக்கு ரூ.134 கோடியே 77 லட்சத்து 13 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்தொகை மூலுவதும் விவசாய பெருங்குடி மக்களுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் கிடைக்கும் பல்வேறு பயனுள்ள தகவல்களை பெற்று விவசாயப் பெருங்குடி மக்கள் சிறுதானிய விவசாயத்தை தருமபுரி மாவட்டத்தில் பெருக்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி ஆ.கோவிந்தசாமி, அரூர் வே.சம்பத்குமார், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் எம்.பொன்னுவேல், சிவப்பிரகாசம், தருமபுரி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பூக்கடை பெ.ரவி, வேளாண்மை துறை இணை இயக்குநர் ஷிவ் சங்கர் சிங், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சீனிவாசன், மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் தமிழ்செல்வன், தருமபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், பசுமை விகடன் இதழாசிரியர் பொன்.செந்தில்குமார், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் பழனிசாமி, ஆறுமுகம் தருமபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாக இயக்குநர் சிவலிங்கம் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.