தற்போதைய செய்திகள்

2270 வாடிக்கையாளர்களுக்கு ரூ.10.70 கோடி கடனுதவிகள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

சென்னை

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 2270 வாடிக்கையாளர்களுக்கு ரூ.10.70 கோடி கடனுதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று சென்னை மத்திய கூட்டுறவு வங்கி, பாண்டிபஜார் கிளையில் நடைபெற்ற விழாவில், 11 நபர்களுக்கு பணிபுரியும் மகளிர் கடனாக ரூ.29 லட்சமும், 796 நபர்களுக்கு சிறுவணிக கடனாக ரூ.237.19 லட்சமும், 72 சுயஉதவி குழுக்களை சேர்ந்த 1080 பயனாளிகளுக்கு ரூ.226 லட்சமும், 4 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய கடனாக ரூ.2.15 லட்சமும், 2 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1 லட்சமும், சிறு குறு மத்திய தொழில் கடனாக ஒருவருக்கு ரூ.74 ஆயிரமும், 5 நபர்களுக்கு நகைக்காசு கடனாக ரூ. 15.85 லட்சமும், பணியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கான பிணை கடனாக 371 நபர்களுக்கு ரூ.558 லட்சமும் என மொத்தம் 2,270 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 69 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி, சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் பாண்டிபஜார் கிளையில் தானியங்கி கணக்குப் புத்தக பதிவு இயந்திர சேவையினையும் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சென்னை மாநகரில், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவும் வகையில் 70 கிளைகளுடன் ரூ.2771.09 கோடி வைப்புத் தொகையுடன் செயல்பட்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் பிப்ரவரி 2020 வரை 1,11,278 நபர்களுக்கு ரூ.1,121 கோடி அளவிற்கு நகைக்கடன் அளித்துள்ளது. சென்னை நகரில், சிறுவணிகம் செய்யும் ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக 350 நாட்களில் திரும்ப செலுத்தும் வகையில் சிறுவணிக கடனாக தனிநபர் ஒருவருக்கு ரூ.25,000 வரை அனுமதித்து வந்துள்ளதை அதிகபடுத்தும் வகையில் ஜனவரி 2020 முதல் ரூ.50,000 ஆக உயர்த்தி 350 நாட்களில் திரும்ப செலுத்தும் விதமாக 10.5 சதவீத வட்டியில் வழங்கி வருகிறது.

நடப்பு நிதி ஆண்டில் 6970 நபர்களுக்கு ரூ.17 கோடி அளவிற்கு சிறுவணிகக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு பணிபுரியும் மகளிர் கடனாக ரூ.7,00,000 வரை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் (2019-20) பிப்ரவரி 2020 வரை 104 பணிபுரியும் மகளிருக்கு ரூ.3.97 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழு கடனாக ரூ.10,00,000 வரை வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் (2019-20) பிப்ரவரி 2020 வரை 251 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.64 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள இவ்வங்கியின் 70 கிளைகளில் 56 கிளைகள் குளிர்சாதன வசதியுடன், புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2013-14-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த கணினி செயல்பாட்டுடன் வங்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. RTGS/NEFT வசதிகளை வழங்கி வருகிறது. தற்பொழுது 10 இடங்களில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பணம் செலுத்தும் இயந்திரம், மற்றும் பாஸ் புத்தகம் பதிவு செய்யும் கருவிகளை அமைத்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 22 கிளைகள் ரூ.202.79 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வாடிக்கையாளர் வசதியினை வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்திற்கு ஏதுவாக எளிமைப்படுத்தும் வகையில் கைப்பேசி வங்கியியல் செயலி சேவை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. புதியதாக மதுரவாயல், போரூர் ஆகிய இடங்களில் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூர் பகுதியில் கிளை விரைவில் திறக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக இவ்வங்கியின் அண்ணாநகர் கிளையில் தானியங்கி பாதுகாப்பு பெட்டக வசதி அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அம்மா அவர்களின் வழியில் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடைபெறும் முதலமைச்சரின் ஆட்சியில், கூட்டுறவு கடன் நிறுவனங்கள் 29.02.2020 அன்று ரூ.56,085.57 கோடி வைப்பு தொகையுடன் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் மேம்பாடு மற்றும் நலனில் அக்கறை கொண்டு கூட்டுறவுச் நிறுவனங்கள் மூலம் 2011 முதல் 29.02.2020 வரை 93,34,251 விவசாயிகளுக்கு ரூ.50,196.56 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் 12,02,075 விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி அளவிற்கு பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் 2011 முதல் 2019 வரை ரூ.1,287.43 கோடி வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது. காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு காய்கறி பயிர் கடனாக 2013-14 முதல் 29.02.2020 வரை 4,42,199 விவசாயிகளுக்கு ரூ.3,565.21 கோடி வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்த 36,44,000 விவசாயிகளுக்கு 29.02.2020 வரை ரூ.7,618.00 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2020-21) ரூ.11,000 கோடி அளவிற்கு பயிர்க்கடனாக வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மேலும், 29.02.2020 வரை வங்கி வாடிக்கையாளர்களுக்கும், பயிர்கடன் பெறும் விவசாயிகளுக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்கும் வகையில், முறையே 2.90 லட்சம் ருபே டெபிட் கார்டுகளும் (பற்று அட்டைகள்), 3.71 லட்சம் ருபே கிசான் கார்டுகளும் (விவசாய கடன் அட்டைகள்) வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் பிற நபர்களுக்கும் உதவிடும் பொருட்டு தமிழகம் முழுவதும் கடந்த 2011 முதல் 29.02.2020 வரை சிறுவணிக கடனாக 15,63,296 பயனாளிகளுக்கு ரூ.1,921.85 கோடியும், இதில் சென்னை மண்டலத்தில் 65,108 பயனாளிகளுக்கு ரூ.79.28 கோடியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கடனாக தமிழக அளவில் 62,047 பயனாளிகளுக்கு ரூ.254.03 கோடியும், சென்னை மண்டலத்தில் 653 பயனாளிகளுக்கு ரூ.263.81 லட்சமும், நகை கடனாக தமிழகம் முழுவதும், 6,09,90,300 நபர்களுக்கு ரூ.2,35,221.44 கோடியும், சென்னை மண்டலத்தில் 10,30,828 நபர்களுக்கு ரூ.13,086.93 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 2011 முதல் 29.02.2020 வரை கூட்டுறவு வங்கிகளில் அனைத்து வகை கடன்களாக 7,40,53,145 நபர்களுக்கு ரூ.3,66,939.44 கோடி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 5,853 சங்கங்கள் ரூ.189.51 கோடி செலவில் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. 706 சங்கங்கள் ரூ.84.68 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் 22 கிளைகள் ரூ.2.63 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் 2011 முதல் 29.02.2020 வரை 7 கிளைகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிளை புதிதாக துவங்க பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும், 2011 முதல் 29.02.2020 வரை 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 129 கிளைகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. 57 கிளைகளுக்கு ரூ.36.05 கோடி செலவில் சொந்த கட்டடங்கள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ், சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் பி.சத்தியநாராயணன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் நா.பாலகங்கா, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத் தலைவர் ஆர்.எஸ்.ராஜேஷ், கூடுதல் பதிவாளர்கள் பா.பாலமுருகன், கே.ஜி.மாதவன், ஜி.செந்தில்குமார், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.மகேஷ், நிர்வாக இயக்குநர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.