தமிழகம்

சென்னை,ஓசூரில் ரூ.198.39 கோடியில் பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 26.9.2019 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை, வில்லிவாக்கம் திட்டப்பகுதியில் சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் “பி”, “சி” மற்றும் “டி” பிரிவு அரசு ஊழியர்களுக்காக சுயநிதி திட்டத்தின் கீழ் 71 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 324 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், சென்னை மாவட்டம் – இந்திரா நகர் மற்றும் ராமாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் புறநகர் திட்டப்பகுதி-19 ஆகிய திட்டப் பகுதிகளில் 126 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பன்னடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள் மற்றும் வீட்டுமனைகளை திறந்து வைத்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 15.9.2015 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசு அலுவலர்களுக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அரசு அலுவலர்களுக்கு சென்னை வில்லிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், சென்னை, வில்லிவாக்கம் திட்டப்பகுதியில் சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் “பி”, “சி” மற்றும் “டி” பிரிவு அரசு ஊழியர்களுக்காக சுயநிதி திட்டத்தின் கீழ் 1.47 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு படுக்கை அறை, கூடம், சமையலறை, படுக்கையறையுடன் இணைந்த கழிவறை மற்றும் குளியலறை, குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள், சூரிய மின்சக்தி இணைப்பு, மின்தூக்கி, தீயணைப்பு வசதி, ஜெனரேட்டர், மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் 71 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 324 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், இப்புதிய குடியிருப்பு திட்டப் பகுதியில், குடிநீர் வசதிக்கான ஆழ்துளை கிணறு, கீழ்நிலை நீர் தேக்கத்தொட்டி, சாலை வசதிகள், மழை நீர் வடிகால் வசதிகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாவட்டம், இந்திரா நகர் திட்டப்பகுதியில் 19 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60 மத்திய வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 9 கடைகள், சென்னை மாவட்டம், ராமாபுரம் திட்டப்பகுதியில் 78 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 384 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் புறநகர் திட்டப் பகுதி-19-ல் மனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 28 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்புகளுடன் கூடிய 214 வீட்டு மனைகள் என மொத்தம் 198 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பன்னடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள் மற்றும் வீட்டு மனைகள் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பி.கே.வைரமுத்து, தலைமைச் செயலாளர் க.சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.