தற்போதைய செய்திகள்

12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் விடைத் தாள் திருத்தும் பணிகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு

மாநிலம் முழுவதும் கடந்த 2-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை சுமார் 8.35 லட்சம் மாணவர்கள் எழுதி வருகின்றனர். மார்ச் 24-ம் தேதி வரை நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளாக

கடந்த 3 ஆண்டுகளாகவே பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளி கல்வித்துறை முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. மாணவர்கள் தேர்வுகளை மன அழுத்தமின்றி எதிர்கொள்ளவும், ஆசிரியர்கள், மாணவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்வதற்கு ஏதுவாகவும் தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்படுகிறது.

தேதிகள் அறிவிப்பு

அந்த வகையில் விடைத் தாள் திருத்தும் பணிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத் தாள்களைத் திருத்தும் பணிகள் மார்ச் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.