மற்றவை

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் உத்தரவுப்படி தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செய்து வருகிறது. அப்படி வந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லமுறையில் உரிய சிகிச்சையளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒகேனக்கல்லில், சுற்றுலா பயணிகளை கையாளும் பரிசல் ஓட்டிகள், சமையல் கலைஞர்கள், மசாஜ் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால், கொரோனா போன்ற தொற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற நோய் தொற்று குறைந்த உடன் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வேண்டும். எனவே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவதை ெபாதுமக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி கூறினார்.