தற்போதைய செய்திகள்

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு அறிக்கை தர ஆலோசகர் நியமனம் – பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

சென்னை

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு அறிக்கை தர ஆலோசகர் நியமனம் செய்யப்படுவார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நாகப்பட்டினம் தொகுதி உறுப்பினர் தமிமுன் அன்சாரி
நாகப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட நாகூர் பட்டினச்சேரி வெட்டாறு வடக்கரையில் கல் கொட்டப்பட்டு, முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்து பேசியதாவது:-

நாகூர் பட்டினச்சேரி வெட்டாறு வடக்கரையில் 360 மீட்டர் நீளத்திற்கு நேர் கல் சுவர் 20 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

மீனவர்களின் சமூக மேம்பாடு, கல்வி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு வருடத்திற்கு ரூ.19 ஆயிரம் நேரடியாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆலோசகர் அமைக்கப்பட்டு, அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

கடலில் கலக்கும் ஆற்று முகத்துவாரங்களை ஆழப்படுத்தி நிலைப்படுத்த அம்மாவின் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த முகத்துவாரங்களில் மீன் இன பெருக்கம் செய்கிறது. மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்துகிறார்கள். எனவே முகத்துவாரப் பகுதிகள் ஆழப்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார்.