சிறப்பு செய்திகள்

அவதூறாக பேசுவதை ஆர்.எஸ்.பாரதி நிறுத்திக் கொள்ள வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை

அவதூறாக பேசுவதை ஆர்.எஸ்.பாரதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோதாவரி- காவேரி இணைப்பு திட்டத்திற்காக தெலுங்கானா முதல்வர் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இதற்கான உதவிகளை செய்துள்ளார். அவருக்கு நன்றி. இன்று நடந்த வனத்துறை மானிய கோரிக்கையில் கோவை மாநகராட்சி வ.உ.சி பூங்கா விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவைக்கு சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரிக்கும். ஆர்.எஸ்.பாரதி நீதித்துறை மட்டுமின்றி பத்திரிகையாளர்கள் குறித்தும், குறிப்பிட்ட சமுதாயத்தை தாழ்த்தியும் பேசி உள்ளார். தொடர்ந்து இதுபோன்ற மோசமான போக்கிற்கு திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் எதுவும் பேசவில்லை. ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

டெல்டா மாவட்ட மக்கள் இன்று தமிழக முதலமைச்சரை வாழ்த்திக் கொண்டியிருக்கிறார்கள். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு போட்டு வருகிறார். குறிப்பாக என் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள். ஏனென்றால் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இணைவதற்கும், அரசின் திட்டங்கள் செயல்படுத்தவும் இந்த அரசு தொடரவும் உறுதுணையாக இருப்பதால் திமுக என்னை குறி வைத்துள்ளது. 13-ந் தேதிக்கு பிறகு என்னை பற்றி தொடர்ந்து ஒரு வாரத்திற்கு அவதூறு பரப்ப திட்டமிட்டுள்ளதாக அறிந்தேன். ஆதாரமில்லாத வழக்குகளை போட்டு அதை பெரிது படுத்தவும் திட்டமிட்டு இருக்கின்றனர். என் மீது எந்த குற்றச்சாட்டு வேண்டுமானாலும் சொல்லட்டும். அதை பற்றி கவலையில்லை.

இப்போது புதிதாக திமுக ஒருவரை கொண்டுவந்துள்ளனர். அவர்களுடைய டார்க்கெட் நான்தான் என்று அறிந்தேன். 123 விருதுகளை உள்ளாட்சித் துறை பெற்றுள்ளது. தமிழக முதல்வர் அனைத்து துறைகளிலும் முதன்மை இடத்திற்கு தமிழகத்தை கொண்டு வந்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தவறான வாக்குறுதிகளை அளித்துதான் தி.மு.க வெற்றிப்பெற்றது.

அதன் பிறகு மக்கள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்த தி.மு.க விற்கு பாடம் கற்பிக்கும் வகையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைத்தார்கள்.ஆகவே வாக்களித்த மக்களுக்கு இன்னும் எத்தனை திட்டங்கள் தர முடியுமோ? அத்தனை திட்டங்களையும் கட்டாயமாக நிறைவேற்றுவோம். இன்னும் பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரவுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.