தற்போதைய செய்திகள்

அரசின் முயற்சியின் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம்

சென்னை

அரசின் முயற்சியின் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதத்துடன் பேசினார்.

தமிழக சட்டபேரவையில் சுற்றுச்சூழல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

இந்திய திருநாடே திரும்பி பார்க்கிற வகையில் நமது முதல்வர் பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக உருவாக்க ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் 01.01.2019 முதல் தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இத்தடையானது 05.06.2018 சுற்றுச்சூழல் தினம் அன்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட போதிலும். 01.01.2019 முதல் தான் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. எனவே, தடையாணையால் பொது மக்களுக்கு ஏற்படும் விளைவினை கருத்தில் கொண்டு அவர்கள் மாற்று பொருளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள போதிய கால அவகாசம் தரப்பட்டது.

இக்கால இடைவெளியில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிற்கு பதிலாக இதர பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளவும் பயன்பட்டது.

அரசு மற்றும் வாரியத்தின் தொடர் முயற்சியின் காரணமாக தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மாநிலத்தில் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. தடையை மீறுபவர்களுக்கு, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை மூலம் அபராத தொகையாக இன்று வரை ரூ.6.26 கோடி தொகையும், 1339 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை முதல்வர் தலைமையில் செயல்படும் அம்மா அரசினால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தோல் மற்றும் துணி, சலவை சாய தொழிற்சாலைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள 33 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 30 சுத்திகரிப்பு நிலையங்கள் பூஜ்ஜிய திரவ வெளியேற்றம் என்ற இலக்கினை அடைந்துள்ளன. திருப்பூரில் அமைந்துள்ள சலவை மற்றும் சாய தொழிற்சாலைகளுக்கான 18 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பூஜ்ஜிய கழிவுநீர் நிலையத்தினை நவீனப் படுத்தவும், மேம்படுத்தவும், அம்மா அரசு ரூ.200 கோடியினை வட்டியில்லா கடனாக வழங்கி, இந்திய ஏற்றுமதியில் தனியிடம் பிடித்துள்ளது.

110-ன் கீழ் அறிவிக்கப்பட்டவாறு புதிதாக பூஜ்ஜிய நிலையுடன் கூடிய பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 372 சலவை மற்றும் சாயப்பட்டறைகள் பயன்பெறும் வண்ணம் நாளொன்றுக்கு 33 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 9 பூஜ்ஜிய நிலை பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ. 1271.99 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், 210 சலவை மற்றும் சாயப்பட்டறைகள் பயன்பெறும் வண்ணம், 2 பூஜ்ஜிய நிலை பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ. 307 கோடி செலவிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 சலவை மற்றும் சாயப்பட்டறைகள் பயன்பெறும் வண்ணம் ஒரு பூஜ்ஜிய நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ. 74.61 கோடி செலவிலும் அமைக்க திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு மாநில அரசின் பரிந்துரையுடன் அனுப்பி வைக்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசு மானியம் போக மீதித் தொகை ரூ. 130 கோடி அளவிற்கு வட்டியில்லா கடன் கொடுக்க முதல்வரின் பரிசீலனையில் உள்ளது.
தீங்கு விளைவிக்கும் கழிவுகளை உற்பத்தி செய்யும் 3492 தொழிற்சாலைகள் அவற்றை விதிமுறைகளின்படி கையாளுவதற்கு உரிய அங்கீகாரத்தை மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ளது.

தொழிற்சாலை கழிவுகளால் மாநிலத்தின் நீர் ஆதாரங்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து தொடர் ஆய்வு செய்யும் பொருட்டு மொத்தம் 55 இடங்களில் ஆறுகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் நீரின் தன்மையை கண்காணித்து வருகிறது. மேலும், தேசிய நீர் வள ஆதார கண்காணிப்பு திட்டத்தின் கீழ் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 24 இடங்களில் அக்டோபர் 2019 முதல் நீரின் தன்மை கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாரிய தலைமையிடத்திலுள்ள கண்காணிப்பு மையத்தில் 343 அதிக மாசு ஏற்படுத்தும் 17 வகையான தொழிற்சாலைகள் மற்றும் சிவப்பு வகை தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் தரம் இணையவழி மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

தொழிற்சாலை கழிவுநீரில் அனைத்து உலோகங்கள் மற்றும் வாயு மாதிரிகளில் ஆர்சனிக் மற்றும் மெர்குரி ஆகிய உலோகங்களின் அளவை கணக்கிடுவதற்கு நவீன நிற மாலை உபகரணங்கள் வாங்குவதற்கு கூடுதல் செலவீனமாக ரூ. 50 லட்சம் வாரிய நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மொத்தம் 28 இடங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் வாரியத்தினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாட்டில் மொத்தம் 9 இடங்களில் தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்களையும் நிறுவி கண்காணித்து வருகிறது. இதுதவிர தமிழ்நாட்டில் வெவ்வேறு நகர்புற மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் சுற்றுப்புற காற்றின் தரத்தை தொடர் கண்காணிப்பு செய்ய 25 நிலையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டு, இதுவரை 24 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இவ்வாறு பேசினார்.