தற்போதைய செய்திகள்

கோவையில் மனித-யானை மோதல்களை தடுக்க ரூ.7.24 கோடியில் முன்னெச்சரிக்கை அமைப்பு – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்

சென்னை

கோவையில் மனித-யானை மோதல்களை தடுக்க ரூ.7.24 கோடியில் முன்னெச்சரிக்கை அமைக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில்  வனத்துறை மீதான மானிய கோரிக்கையின் போது அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

சாஸ்திரி-ஸ்ரீமாவோ 1964 ஆம் ஆண்டு உடன்படிக்கையின்படி, இந்தியா திரும்பிய இலங்கை அகதிகளின் மறுவாழ்விற்காக, தமிழக அரசால் அரசு தேயிலைத் தோட்டக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. இக்கழகம், தமிழ்நாடு வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து 4053.758 ஹெக்டேர் நிலப்பரப்பில் தேயிலைத் தோட்டங்களைக் கொண்டுள்ளது 2019-20ஆம் ஆண்டில் 239.65 லட்சம் கிலோ கிராம் பசுந்தேயிலை மற்றும் 58.28 லட்சம் கிலோகிராம் தேயிலைத்தூள் உற்பத்தி எய்தப்பட்டுள்ளது.

அரசு ரப்பர் கழகம், நாகர்கோவில் அரசு ரப்பர் கழகமானது 1956 ஆம் ஆண்டின் இந்திய கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 1984 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. ரப்பர் தோட்டங்களின் நலனைப் பாதுகாத்தல், தொழிலாளர்களின் நலனைப்பாதுகாத்தல் மற்றும் இலங்கை அகதிகளுக்கு மறுவாழ்வு அளித்தல், ரப்பர் தொழிலில் உள்ள ஊரக வணிகத்தை தடை செய்தல்மற்றும் ரப்பர் தொழிலில் தனியார்மயமாதலை தடுத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு நாகர்கோவிலில் இயங்கி வருகிறது.

இக்கழகத்தில் முதிர்ந்த ரப்பர் மரங்களில் தீவிர பால்வடிப்பு செய்து பின்பு அப்புறப்படுத்தப்பட்டு அதிக மகசூல் தரக்கூடியஉயர்தர ரப்பர் ரகங்களை நடவு செய்ய சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம், திருச்சிராப்பள்ளி 1974 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் தைலத்தோட்டங்களை உற்பத்தி செய்து தொடர்ந்து பராமரித்து, அறுவடை செய்து கூழ்மர மற்றும் காகித ஆலை நிறுவனங்களுக்கு வினியோகம் செய்தல், வனப்பரப்புகளின் உற்பத்தித் தன்மையை அதிகப்படுத்துவது, ஊரக வேலைவாய்ப்பு வழங்குவது, மண்வள பாதுகாப்பு மற்றும் ஊரக மக்களின் விறகு மரத் தேவையைப்பூர்த்தி செய்வது போன்ற நோக்கங்களுடன் செயல்பட்டு வருகிறது.

இக்கழகம், ரூ.10 கோடி அனுமதிக்கப்பட்ட மூலதனம் மற்றும் ரூ.5.64 கோடி மதிப்பிலான வழங்கப்பட்ட செலுத்தப்பட்ட மூலதனத்தைக் கொண்டுள்ளது. இக்கழகத்தின் ஒட்டுமொத்த மூலதனமும் தமிழ்நாடு அரசிடம் உள்ளது. தற்போது, 71,540.50 ஹெக்டேர் காப்புக்காடுகள், தமிழ்நாடு வனத்துறையால் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அரசின் ஆணைப்படி ஆண்டு வருவாயில் 30 விழுக்காடு அளவு தொகையை தமிழ்நாடு வனத்துறைக்கு இக்கழகம் செலுத்தி வருகிறது.

வன விரிவாக்க மையங்களை நவீனப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் விவசாயிகள், வனப்பணியாளர்கள், தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல்கள் ரூ.2.40 கோடி செலவில் மேற்கொள்ளுதல்.2019-20 ஆம் ஆண்டு முதல் நீர்ப்பாதுகாப்பு மற்றும் நீர்ப்பிடிப்பு முகடுகளில் நீர்வள மேம்பாடு ஆகியவற்றினை உறுதி செய்யும் நோக்கத்தில், தமிழ்நாட்டிலுள்ள பாலாறு ஆற்றிற்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் ரூ.1302.07 லட்சத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019-20ஆம் ஆண்டில் 13 தடுப்பணைகள் மற்றும் 10 கசிவு நீர் குட்டைகள் கட்டப்பட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டரை மற்றும் புல்லேரியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள தோட்டங்களை ரூ 3.34 கோடி செலவில் புதுப்பித்தல் .திண்டுக்கல் சிறுமலையில் ரூ.5.00 கோடி செலவில் பல்லுயிர் பூங்காஅமைத்தல்.கோயம்புத்துரிலுள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம் மற்றும் வைகை அணையிலுள்ள வனவியல் பயிற்சிக் கல்லுரி ஆகியவற்றை ரூ 15.74 கோடி செலவில் மேம்படுத்தி நவீனப்படுத்துதல்.நீலகிரியிலுள்ள கூடலூர் ஜென்மம் நிலங்களில் வனம் மற்றும் உயிர்ப்பன்மையினை பாதுகாக்கும் முயற்சியில், தமிழ்நாடு வனச்சட்டம், 1882ன் கீழ் (தமிழ்நாடு வனச்சட்டம்-ஏ, 1882), 2019ஆம் ஆண்டில், 16 ஹ என்கிற பிரிவினை ஏற்படுத்தி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூடலூர் ஜென்மம் எஸ்டேட் (ஒழிப்பு மற்றும் இரயத்துவாரி மாற்றம்) சட்டம், 1969, பிரிவு 53ன் கீழ் 12117.27 ஹெக்டேர் (29942.43 ஏக்கர்) நிலம் அறிவிக்கை செய்யப்பட்டு, வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2019-20 முதல் 2021-22 முடிய 3 ஆண்டில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காப்புகாடுகளை ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைகள் கொட்டுவதிலிருந்து பாதுகாக்க கான்கீரிட் சுவர் மற்றும் உயிர் வேலி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு 2019-20 ஆம் ஆண்டில் 14.2 கி.மீ நீளத்திற்கு கான்கீரிட் சுவர் மற்றும் 75 கி.மீ நீளத்திற்கு உயிர் வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது வனத்துறையின் பராமரிப்பின் கீழ் வரும் மரக்கிடங்குகள், சோதனைச் சாவடிகள், அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் ரூ.1.03 கோடி செலவில் பொருத்தப்பட்டு வனப்பாதுகாப்பினை பலப்படுத்துதல்.

முன்னிலை வனத்துறை களப்பணியாளர்களின் குடியிருப்புகளுக்கு சிறப்பு பராமரிப்புப் பணிகள் ரூ 30.00 கோடி செலவில் மேற்கொள்வதன் மூலம் வனப் பாதுகாப்பினை பலப்படுத்துதல். 576.972 கி.மீ. நீளத்திற்கு, 107 வனச்சாலைகளை மேம்படுத்திட 57.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்.வனத்துறையின் கீழ் வரும் வனப்பகுதி முழுவதையும் வன எல்லைகளை துல்லியமாக புவியிடங்காட்டி மூலம் வரையறை செய்வதற்கான திட்டம் ரூ.50.00 கோடி செலவில் மேற்கொள்ளுதல். பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக வனநிலத்தின் தேவை அதிகரிக்கின்ற போதிலும், வனமற்ற பணிகளுக்கு வன நிலத்தை மாற்றம் செய்வது குறைந்த அளவிலேயே இருப்பதை தமிழ்நாடு வனத்துறை உறுதி செய்துள்ளது.

வனப்பாதுகாப்புச் சட்டம் 1980 இயற்றப்பட்டது முதல், 39 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட காலவரையில், 437 இனங்களில், சுமார் 5143.72 ஹெக்டேர் பரப்பு மட்டுமே, வனமற்ற பணிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வன வளங்கள், வன வள ஆதாரங்கள் மற்றும் வன உயிரின வாழ்விடங்கனை பாதுகாக்க தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 14 உதவி வனப்பாதுகாவலர்கள் மற்றும் 154 வனப் பயிற்றுநர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 300 வனவர்கள், 726 வனக்காப்பாளர்கள் 61 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள், 564 வனக்காவலர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 196 மிகைப்பணியிட தோட்டக்காவலர்கள் / வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மாலி பதவிக்கான ஊதிய விகிதத்தில் மிகைப்பணியிட வனக்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 164 உதவியாளர்கள், 48 இளநிலை உதவியாளர்கள், 22 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் நிலை-111 மற்றும் 38 தட்டச்சர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டுள்னர். கருணை அடிப்படையில் 35 இளநிலை உதவியாளர்கள், 3 தட்டச்சர்கள், 6 வனக்காப்பாளர்கள், 12 இரவுக்காவலர்கள், ஒரு ஓட்டுநர், ஒரு மின்வினைஞர் ஆகியோர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேட்டைத் தடுப்பு காவலர்களின் தொகுப்பூதியம் மாதம் 10,000 ரூபாயிலிருந்து 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புலிகள் வாழ்விடங்களை ஏற்படுத்த, தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளினால், புலிகளின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 229 லிருந்து 2018 கணக்கெடுப்பின்படி 264 ஆக அதிகரித்துள்ளது.ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக மாவட்ட அளவிலான ஈரநில மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

கலைநயம் மிக்க கருத்து விளக்கக்கூடத்துடன் கூடிய சிறு கூட்ட அரங்கம் களக்காடு முண்டந்துறை, ஆனமலை மற்றும் சத்தியமங்கலம்ஆகிய மூன்று புலிகள் காப்பகங்களில் ரூ9.00 கோடி செலவில் அமைத்தல். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடல்ஆமைகள் பாதுகாப்பு மையம் ரூ.2 கோடி செலவில் அமைத்தல்.கோயம்புத்துரில் தொலை உணர்வு கருவிகள் மூலம் மனித-யானை மோதல்களுக்கான முன்னெச்சரிக்கை அமைப்பு ரூ 7.24 கோடி செலவில் ஏற்படுத்துதல்.

வண்டலூரில் அமைந்துள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் உலகத்தரம் வாய்ந்த வன உயிரினக்கல்வி மற்றும் விடுதி வசதி ரூ 8.35 கோடி செலவில் ஏற்படுத்துதல். ஏற்கனவே இருக்கும் மாநில மரம், மாநில மலர், மாநில பறவை மற்றும் மாநில விலங்கு சின்னங்களுடன் பட்டாம் பூச்சி இனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்த தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனங்களை தமிழ்நாடு மாநில பட்டாம் பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் பாதுகாப்பில் “சிறந்த மேலாண்மைக்கான” விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு வழங்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு விவரத்தை வெளியிடும் போது இதற்கான விருதை பிரதமரிடம் இருந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் பெற்றுக்கொண்டார். மலேசியாவில் நடைபெற்ற கபடி உலகக் கோப்பையில் இந்தியாவின் சார்பாக குருசுந்தரி, வனக்காப்பாளர் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றதை முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பளு தூக்கும் போட்டியில் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரியும் எஸ்.எஸ். மணிமாறன், இந்தியாவின் சார்பாக பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்று வனத்துறைக்கு பெருமை சேர்த்து பாராட்டு பெற்றுள்ளார். இதனை மனதில் கொண்ட மாண்புமிகு அம்மாவின் அரசு, வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு ரூ.24.58 கோடி மதிப்பீட்டில் புத்துயிர் திட்டம் செயல்படுத்தி வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.