தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

கரூர்:-

கரூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

கரூர் மாவட்ட சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கரூர் மற்றும் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 320 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தினார். அதில் பெண்களை மையப்படுத்தி செயல்படுத்திய திட்டங்களே அதிகம். பெண் சிசு கொலைகளை தடுக்கும் விதமாக தொட்டில் குழந்தை திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதிஉதவி திட்டம், ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள், மிக்ஸி,

கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், வளரிளம் பெண்களுக்கான சத்தான உணவு பொருட்கள் வழங்கும் திட்டம், இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு நிதியுதவி திட்டம், படிக்கும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் திட்டம், பணிக்கு செல்லும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், மகளிர் சுயஉதவி குழுவினர்க்கு பொருளாதார கடன்,

கர்ப்பிணி பெண்களுக்கான அம்மா பரிசு பெட்டகம், அரசு பணிபுரியும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9 மாதமாக உயர்த்திய திட்டம், அனைத்து பேருந்து நிலையங்களிலும் பாலூட்டும் தாய்மார்களுக்கென்று பிரத்யேக அறை வழங்கிய திட்டம், அரசு மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்களை அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று பாதுகாப்பாக வீட்டில் விடும் திட்டம், விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என அம்மா அவர்கள் பெண்களின் பாதுகாப்பையும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு தீட்டிய திட்டங்கள் அதிகம்.

அதுமட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தாயாக இருந்து அவர்கள் கர்ப்ப காலத்தில் பெற்றோரால் நடத்தப்படும் வளைகாப்பு நிகழ்ச்சியைவிட சிறப்பான நிகழ்வாக அமையும் வகையில், சமுதாய வளைகாப்பு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கப்படும் மகத்தான திட்டத்தை அம்மா அவர்கள் செயல்படுத்தினார். அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் அரசு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கியுள்ளது. அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து சிறப்பாக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் சரிவிகித ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டும். மேலும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுதல், இனிமையான இசைகளை கேட்பது, நல்ல புத்தகங்களை படிப்பது போன்றவைகளை செய்வதன் மூலம் ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான, ஆரோக்கியமான ஒரு குழந்தையை பெற்றெடுக்கலாம். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும் உணவில் இனிப்பு, காரம், இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் இச்சத்துக்கள் குழந்தைக்கும் கிடைக்கிறது.

நீங்கள் உங்களுக்காக சேர்த்து வைக்கும் ஒரே சொத்து நீங்கள் பெற்றெக்கக்கூடிய பிள்ளை. அந்த சொத்தை உருவாக்கக்கூடிய சிற்பி நீங்கள். நீங்கள் கொடுக்கக்கூடிய உணவு, மன அமைதி, கேட்கக்கூடிய சொல், செயல் இவை அத்தனையும் சார்ந்ததுதான் உங்கள் குழந்தையின் வளர்ச்சி. உங்கள் குழந்தையை சிறந்த குழந்தையாக வளர்க்க வேண்டுமென்றால் மனம் மற்றும் உடல் இரண்டையும் வலிமையாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்நிரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிக, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், கண்ணதாசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் பேங்க் நடராஜன், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் மார்க்கண்டேயன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் தமிழ்நாடு செல்வராஜ், என்.எஸ்.கிருஷ்ணன், மோ.ரேணுகா, சு.மல்லிகா, கரூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சபிதா, சஹீமா பாத்திமா பேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.