மதுரை

உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை உறுதி செய்ய வேண்டும் – பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ வேண்டுகோள்

மதுரை:-

முதலமைச்சரின் சாதனைகளை எடுத்து சொல்லி உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் 96-வது வார்டில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

 இக்கூட்டத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

கடந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 86 வார்டுகளில் கழகம் வெற்றி பெற்றது. இந்த முறை நாம் 100 வார்டுகளிலும் வெற்றிபெற உழைக்க வேண்டும். திமுக கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் இருந்தாலும் அங்கு பெண்கள் ஒருசிலரே பங்கேற்பார்கள். ஆனால் கழக கூட்டத்தில் மகளிர், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள். ஏனெனில் கழகத்தினர் பண்பாளர்கள். மதுரை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் சாலை வசதிகள், உயர்மட்ட மேம்பாலங்கள், பறக்கும் பாலங்கள், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள், குடிநீர் வசதி, விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம், பசுமை வீடுகள், மாணவர்களுக்கு மடிகணினி உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டங்கள் இப்படி பல்வேறு வகையில் மக்களுக்கு இந்த அரசு உதவி வருகிறது.

தற்போது முதல்வர் நலிவடைந்த விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளார் .இதுபோன்ற திட்டங்களை மக்களிடம் வீடுவீடாக சென்று எடுத்துக்கூறி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரியுங்கள். அதேபோல மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை பெற்றுத்தர எங்களை அணுகுங்கள். குறிப்பாக தகுதி படைத்தவர்களுக்கு முதியோர் உதவித்தொகை, பசுமை வீடுகள், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று நாம் பெற்றுத் தருவோம்.

முதல்வர் வேளாண்மைத்துறை, விளையாட்டுத்துறை, கலைத்துறை, தமிழ்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி அவர்களுக்கு உண்டான கவுரவத்தை பெற்றுத் தருகிறார். இந்திய அளவில் சுகாதாரத்தில் தமிழகம்தான் முன்னணியில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றிபெற்றது. அதில் எந்த பயனும் இல்லை.

மத்தியிலும், மாநிலத்திலும் நாம்தான் ஆட்சியில் உள்ளோம். உள்ளாட்சியிலும் நாம் வெற்றி பெற்றால்தான் மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு செய்ய முடியும். தி.மு.க.வால் எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது. அம்மாவின் மறைவிற்கு பிறகு இந்த ஆட்சி இருக்காது என்றார்கள். ஆனால் தற்போது மூன்றாவது ஆண்டை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு நிர்வாகி 50 வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.கருத்தகண்ணன், சிறுபான்மை பகுதி செயலாளர் அக்பர்அலி, இலக்கிய அணி பகுதி செயலாளர் ப.மோகன்தாஸ், வட்ட செயலர் பொன்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.