தற்போதைய செய்திகள்

தொல்லியல் துறைக்கு தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் கேள்வி

திருவள்ளூர்:-

தொல்லியல் துறைக்கு தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆவடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி ேமம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.64 லட்சம் மதிப்புள்ள புதிய பேருந்து நிழற்குடை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நவீன கழிப்பிட வசதி மின்சார ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மக்கள் பயன்பாட்டிற்காக ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான க.பாண்டியராஜன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கீழடி ஆய்வு மட்டுமல்லாமல் அனைத்து தொல்லியல் ஆய்வுகளும் ஒரு மாலையாக தொடுத்து ஒரு கோப்பாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்துடைப்பு என்பது திமுக ஆட்சியில் தான் இருந்து வந்தது. தொல்லியல் துறையை பற்றி பேசும் ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொல்லியல்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை சொல்ல முடியுமா? கடந்த திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் மொத்தமாக எவ்வளவு தொகை தொல்லியல் துறைக்கு வழங்கப்பட்டது என அறிக்கை தருவாரா ஸ்டாலின்.

ஆவடி ரயில் நிலையம் ஆதர்ஷ் நிலையமாக மாற உள்ளது. அந்த பணிகளுக்கான பட்ஜெட்டில் சி.சி.டி.வி. கேமராவுக்கு நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் .சி.டி.வி. கேமரா அமைக்கப்படும். ஆவடியில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் 30 நாட்களில் சரி செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன், முகவை சுந்தரம், முல்லை தயாளன், கே.எஸ்.சுல்தான், ஆர்.வி. கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் நகர் ரவி, டேவிட் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.