தற்போதைய செய்திகள்

100 பயனாளிகளுக்கு ரூ. 50 லட்சம் கடனுதவி – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், கொலசனஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பயிர்க்கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி, தலைமை வகித்தார்.
இவ்விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு ரூ.50.23 லட்சம் மதிப்பில் சுய உதவிக்குழு கடன் மற்றும் பயிர் கடன்களை வழங்கி பேசியதாவது:-

பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொலசனஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 72 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனாக ரூ.37.16 லட்சம், 24 உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 131 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமும் 2 மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவு கடன் சங்க மூலமும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகையீட்டின் பேரில் விவசாய நகைக் கடன்கள், பண்ணை சார்ந்த நீண்ட கால கடன்கள், மத்திய காலக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், டாப்செட்கோ கடன்கள் வழங்கி விவசாயத்திற்கு சேவை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் 2018-19-ம் ஆண்டிற்கு பயிர்க்கடன் வழங்கிட ரூ.8000 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பயிர்க்கடனாக 2018-19-ம் ஆண்டிற்கு ரூ.183 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 40218 விவசாயிகளுக்கு ரூ.242.07 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2019-20-ம் ஆண்டிற்கு விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடி பயிர்க்கடன் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்திற்கு 2019-20ம் ஆண்டிற்கு ரூ.260 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தவணை தவறாது திரும்ப செலுத்துபவருக்கு 7சதவீத வட்டித் தொகை முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வட்டி இல்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய காலக்கடன் வழங்கும் திட்டத்தில் 2018-19-ம் ஆண்டிற்கு ரூ.12.50 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1376 விவசாயிகளுக்கு ரூ.12.64 கோடி மத்திய காலக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2019-20-ம் ஆண்டிற்கு ரூ.12.90 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 31.08.2019 வரை 347 விவசாயிகளுக்கு ரூ.2.95 கோடி மத்திய காலக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

தானிய ஈட்டுக்கடன் வழங்கும் திட்டத்தில் 2018-19-ம் ஆண்டிற்கு ரூ.7.60 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 461 விவசாயிகளுக்கு ரூ.9.85 கோடி தானிய ஈட்டுக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2019-20-ம் ஆண்டிற்கு ரூ.10.68 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 31.08.2019 வரை 74 விவசாயிகளுக்கு ரூ.1.65 கோடி தானிய ஈட்டுக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

டாப்செட்கோ கடன் வழங்கும் திட்டத்தில் 2018-19-ம் ஆண்டிற்கு ரூ.8.50 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 2529 உறுப்பினர்களுக்கு ரூ.12.77 கோடி டாப்செட்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் 2019-20-ம் ஆண்டிற்கு ரூ.8.50 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவிநியோகத்திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று விவசாய பெருமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதுடன் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடனை முறையாக திருப்பி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மாதையன், தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் திபொன்னுவேல், துணை பதிவாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், கூட்டுறவு சங்க தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.