தற்போதைய செய்திகள்

தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு திட்டத்தை வாரி வழங்கியவர் அம்மா – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு

திருப்பூர்:-

தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு திட்டங்களை வாரி வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமுதராணி திருமண மண்டபத்தில் 29.09.2019 அன்று சமூக நலத்துறையின் சார்பில் திருமண நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார்.

விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடுஅரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 604 பயனாளிகளுக்கு ரூ.4.12 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கத்தினை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வாழ்வு மேம்படுவதற்காக எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வந்தார். குறிப்பாக பெண்களின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட அம்மா அவர்கள் பெண்களுக்கான திட்டங்களை தாயுள்ளத்தோடு வாரி வழங்கி வந்தார்.

அந்த வகையில், அம்மா அவர்கள் 2016-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஏழை பெண்களின் திருமண நிதியுதவி திட்டத்தை விரிவுபடுத்தி திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும், 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரம், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியும் வழங்கியவர் அம்மா. அவரது வழிகாட்டுதலின் படி செயல்படும் முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக விலையில்லா ஆடுகள், விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டமும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக ஒரு தாய் தன் பிள்ளைக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படுவாரோ அதேபோல் ஒரு தாய்க்கு ஒரு தாயாக இருந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதற்குரிய திட்டங்களை வழங்கி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்பட முடியாத அளவிற்கு பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் திட்டங்களை வழங்கி தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றித் தந்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். தங்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்கள் நல்ல முறையில் பெற்றுக்கொண்டு எல்லா வளமும், எல்லா நலமும் பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இந்திரவள்ளி, திருப்பூர் மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன், வட்டாட்சியர் தயானந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.