தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்காது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திட்டவட்டம்

மதுரை:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்காது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை ஆரப்பாளையத்தில் புதிய பேருந்துகள் துவக்க விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு 10 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜசேகர், மாவட்ட கழக நிர்வாகிகள் தங்கம், ராஜா மற்றும் எம்.எஸ்.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய பேருந்துகளை தொடங்கி வைத்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக கழக அரசு உள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றும் அரசாகவும் உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலங்களில் மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செய்யவில்லை. மாறாக தங்களுக்கு மத்தியில் வளம் கொழிக்கும் துறைகளை கேட்டு பெற்றுக் கொண்டு அதன் மூலம் கொள்ளையடித்தனர்.

மக்கள் மத்தியில் தி.மு.க. ரவுடி கட்சியாக தான் தெரிகிறது. ஏனென்றால் இதே தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது பல்வேறு அராஜகங்கள் நடைபெற்றது. அப்போது நீதிமன்றம் அதனை கண்டித்து பல்வேறு இடங்களில் மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. ஓசி பஜ்ஜிக்காகவும், ஓசி பிரியாணிக்காகவும் அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் கழகம் மாபெரும் வெற்றி பெறும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல் பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகளை ஸ்டாலின் பெற்றார். ஆனால் இந்த முறை மக்களை ஏமாற்ற முடியாது. ஆகவே இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் கழகம் மகத்தான வெற்றி பெறும். எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்காது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.