சிறப்பு செய்திகள்

8 ஆண்டுகளில் 11.45 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி அம்மா அரசு சாதனை – சேலம் விழாவில் முதலமைச்சர் பெருமிதம்…

சேலம்:-

கடந்த எட்டு ஆண்டுகளில் 11.45 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி அம்மாவின் அரசு சாதனை படைத்துள்ளது என்று சேலம் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 29.9.2019 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை வருமாறு:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு மே மாதம் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாலிக்குத் தங்கம் வழங்குவதை முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். அதன்படி, ஏழை பெற்றோர்களின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள், ஏழை விதவையின் மகள், கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் ஆகியோர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பட்டதாரி அல்லாதாருக்கு ரூ.25 ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு
ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

மேலும், திருமாங்கல்யம் செய்வதற்கு முதலில் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. அம்மா அவர்கள் 2016-ம் ஆண்டு முதல் அதனை 8 கிராமாக உயர்த்தி வழங்கினார். 2011-ம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளில் 4,71,237 பட்டதாரி பெண்களுக்கும் 6,74,673 பட்டதாரி அல்லாத பெண்களுக்கும் என ஆக மொத்தம் 11,45,910 பெண்கள் பயனடைந்துள்ளார்கள். இதற்காக 5,260.72 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படுவதில்லை.

பெண் குழந்தைகள் பிறந்துவிட்டது என்று முகம் சுழிக்கின்ற நிலையை மாற்றி, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தாய்மார்கள் பெற்றெடுக்கின்ற குழந்தைகளை, தான் பெற்ற குழந்தைகளைப் போல் கருதி, தாயுள்ளத்தோடு அக்குழந்தைகளுக்கு 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா பரிசு பெட்டகம், கரு நல்ல முறையில் வளர்வதற்கு ஊட்டச் சத்துப் பெட்டகம் என அனைத்து உதவிகளையும் வழங்கியிருக்கின்றார்கள். சேலம் மாவட்டத்தில் 500 படுக்கைகள் கொண்ட மகப்பேறு மருத்துவப் பிரிவினை அம்மா அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். ஏழைத் தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்காக பச்சிளம் குழந்தை சிறப்பு சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அம்மா அவர்கள் பெண்களுக்கென நிறைய சிறப்புத் திட்டங்களைக் செயல்படுத்தியிருக்கிறார். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடனுதவி வழங்கிய மாநிலம் தமிழ்நாடு. அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னுக்கு வருவதற்கு அடித்தளமாக விளங்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் சதவிகிதம்
49-ஆக உயர்ந்துள்ளதற்கு பெண்கள் அதிகமான அளவில் கல்வி பயில்வது தான் காரணம். கடந்த 8 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில், திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், 237.50 கிலோ கிராம் தங்கம் ஏழை, எளிய பெண்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

சமூக நலத்துறையின் சார்பில் 2019-2020-ம் ஆண்டிற்கு தமிழ்நாடுஅரசு திருமண நிதியுதவி திட்டத்திற்கு ரூபாய் 726.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 6000 ஏழை பெண்களுக்கு ரூபாய் 23 கோடியே 39 லட்சத்து 75 ஆயிரம் திருமண நிதியுதவியும், ரூபாய் 18 கோடியே 73 லட்சம் மதிப்பிலான தாலிக்குத் தங்கமும் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் 200 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு மக்களின் அரசு. கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்கின்ற அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அவர்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்றித் தருகின்ற அரசு அம்மா அவர்களின் அரசு. இந்த அரசுக்கு நீங்கள் நல்லாதரவு தரவேண்டுமென்று கேட்டு விடைபெறுகின்றேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.