தமிழகம்

தொன்மையான மொழி தமிழ் மொழி தான் – பிரதமர் மோடி புகழாரம்

சென்னை:-

உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி தான். அதன் இருப்பிடம் தமிழகம் தான் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இளைஞர்களின் உத்வேகம் உற்சாகம் அளிக்கிறது. சாதித்த மாணவர்களின் பெற்றோர்களை பாராட்டுகிறேன். அவர்களின் தியாகம் உங்களை வளர்த்துள்ளது. இளைஞர்களின் கண்களில் ஒளியை காண்கிறேன். உங்களின் வெற்றியில் பெற்றோரின் உழைப்பு தெரிகிறது. உங்கள் சாதனைகளில் ஆசிரியர்கள் உள்ளனர். எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்களின் கண்களில் பார்க்கிறேன். உலகின் பழமையான மொழி தமிழ் தான். உலகின் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம் தான்.

இந்தியாவின் மூத்த மொழி தமிழ் மொழி. உலகின் மிக பழமையான மொழியான தமிழை போற்றுவோம். நீங்கள் ஒரு சிறந்த கல்வி சாலையில் இருந்து வெளியேறி இருக்கிறீர்கள். உலகமே உற்று நோக்கும் கல்விச்சாலை இது. இந்திய இளைஞர்கள், இளம்பெண்கள் மீது உலகமே எதிர்பார்ப்பில் உள்ளது. உங்களுடைய ஐ.ஐ.டி.யின். முன்னாள் மாணவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளார்கள். இந்தியர்களின் முயற்சியில் உழைப்பு, தன்னம்பிக்கை கண்டு உலகமே வியக்கிறது. உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியர்கள் ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள் தான்.

நான் அமெரிக்கா சென்றிருந்தபோது அங்குள்ள கல்வியாளர்களையும், தொழில் அதிபர்களையும் சந்தித்து பேசியபோது இந்திய இளைஞர்களின் திறமை எத்தகையது என்பதை உணர முடிந்தது. இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் பெரும் பாராட்டுதலை பெற்றிருக்கிறார்கள். உலக சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டின் தேவையை புரிந்து மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இதுவரை 200 ஸ்டார்ட் அப் தொழில்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பசி, தூக்கம் பாராமல் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும். உலகின் 3 பெரிய ஸ்டார்ட் அப் கண்டுபிடிப்புகள் இந்தியாவினுடையது. ஐ.ஐ.டி. மாணவர்கள் உலகில் எங்கு பணியாற்றினாலும் இந்தியாவின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

விழாவில் தமிழகஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் போது மாணவர்கள் வேஷ்டி, சர்ட் அணிந்தும், மாணவிகள் சுடிதார் மற்றும் புடவை அணிந்தும் மேடைக்கு வந்து பட்டங்களை பெற்ற காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.