சிறப்பு செய்திகள்

மகிழ்வுடன் ரத்ததானம் செய்ய முன் வாரீர் – தமிழக மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

தமிழக தனியார் மற்றும் அரசு ரத்த வங்கிகளில் 9 லட்சம் அலகுகளுக்கு மேல் ரத்தம் சேமிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தன்னார்வ ரத்ததானத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. தமிழக மக்கள் மகிழ்வுடன் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தேசிய தன்னார்வ ரத்த தான நாள் செய்தி வருமாறு:-

ரத்தம் உயிரின் நாடி என்பதால், ரத்த தானம் செய்வது விலை மதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான நாளின் கருப்பொருள் “வாழ்நாளில் ஒருமுறையாவது ரத்த தானம் செய்வோம்” என்பதாகும்.

ரத்த தானத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டந்தோறும் “மீம்ஸ் போட்டி” நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கினர். அத்துடன், ஆண்டுதோறும் தன்னார்வ ரத்த கொடையாளர்கள், சிறப்பாக பணியாற்றும் ரத்த தான முகாம் அமைப்பாளர்கள், அரசு ரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு, பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவித்து வருகிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தானமாக பெறப்படும் ரத்தத்தை சிறந்த முறையில் பாதுகாத்து பயன்படுத்தும் வகையில், இரத்த தான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தத்தை, ரத்த வங்கிகளுக்கு எடுத்து சென்று சேமிக்க, குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன நடமாடும் ரத்த ஊர்திகளை வழங்குதல், அரசு ரத்த வங்கிகளில் ரத்தத்தை சேமிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களின் வெப்ப நிலையினை கண்காணிக்க டேட்டா லாக்கர் பொருத்துதல், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அரசு இரத்த வங்கிகளில் பணிபுரியும் ஆய்வக நுட்புனர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தல் போன்ற திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் 9,16,929 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டு, தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மகிழ்வுடன் ரத்த தானம் செய்திடுவோம்!
மனித உயிர்களை காத்திடுவோம்!!

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தேசிய தன்னார்வ ரத்த தான நாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.