தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா – பந்தக்கால் நடும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் பணி தொடங்கியது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அத்துடன் நகரின் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற நவம்பர் மாதம் 28-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது.கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ராஜ கோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட ஆவின் பால்வளத் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் பாரி பாபு, திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர கழக செயலாளர் ஜெ.செல்வம் நகர்புற கூட்டுறவு வங்கி தலைவர் டிஸ்கோ குணசேகரன், கோயில் இணை ஆணையர் ஞானசேகர், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.