தற்போதைய செய்திகள்

டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை- புதுச்சேரி அரசுக்கு கழக எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுச்சேரி

டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு கழக எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி மாநில கழக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசானது மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினையில் கவனம் செலுத்தாமல், அரசியல் செய்வதிலேயே காலம் கடத்துகிறது. இதனால் மக்கள் நலன் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
தற்போது புதுச்சேரி மாநிலம் முழுவதும் டெங்கு நோய் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் சுகாதாரத்துறையில் செய்யப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆரம்பக்கட்ட ரத்த பரிசோதனை செய்யும் வசதிகள் கூட ஏற்படுத்தப்பட வில்லை.

புதுச்சேரி முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், மக்களை பற்றி கவலைப்படாமல் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். காமராஜர் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வருகிறார். ராஜஸ்தான் முதல்வர் வருகிறார் என மக்களுக்கு கிளு, கிளுப்பு காட்டும் முதல்வர் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித உயர் சிகிச்சை இந்த அரசு செய்யப்போகின்றது என்ற ஆறுதலான ஒரு வார்த்தை கூட முதல்வரிடம் இல்லை. இந்த அரசுக்கு மக்கள் நலனில் துளிக்கூட அக்கறையின்மை இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

எனவே முதல்வர் தொடர்ந்து அரசியல் செய்வதையே குறிக்கோளாக இருப்பதை விட்டுவிட்டு தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதை உணர்ந்து, மக்களின் உயிர் சார்ந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கையை முதல்வர் எடுக்க
வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் டெங்கு சம்பந்தமாக சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தி மாநிலத்தில் பிற மாவட்டத்தில் உள்ள சிறப்பு மருத்துவர்களை உடனடியாக இப்பிரச்சினையில் ஈடுபடுத்த வேண்டும்.

பொதுமக்களும் இதில் அரசையே நம்பாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக அவரவர் வீடுகளில் எங்கும், எதிலும் சிறு பொருட்களில் கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி தேங்கக்கூடிய தண்ணீரில் டெங்கு சம்பந்தமான கொசு உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டும். நம்முடைய இருப்பிடங்களை தூய்மையாக மக்கள் வைத்துக் கொண்டாலே ஓரளவு.சுகாதாரத்துடன் வாழலாம். செயல்படாத இந்த அரசையே நம்பி மக்கள் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.