சிறப்பு செய்திகள்

நீர்வளமிக்க மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் – முதலமைச்சர் சபதம்

மழை பொய்த்தாலும், இயற்கை வஞ்சித்தாலும் சென்னை மாநகருக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க அம்மாவின் அரசு முழு வீச்சுடன் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி சாதனை படைத்தது போல் நீர்வளமிக்க மாநிலமாகவும் மாற்றி காட்டுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி ேக.பழனிசாமி சூளுரைத்தார்.

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை, கொடுங்கையூரில் ரூ.348 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் ஆற்றிய உரை வருமாறு:-

“மக்கள் நம் பக்கம் இருக்கிறார்களா என்பதை விட மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பதே எப்போதும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது. என்னை நம்புகின்ற மக்களுக்கு என்ன என்ன வழிகளில் எல்லாம் நன்மை செய்ய இயலுமோ, அந்த வழிகளைப் பற்றியே நான் சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். அதனால்தான் என் அன்பிற்குரிய மக்களாகிய நீங்கள் எப்போதும் என் பக்கம் இருக்கிறீர்கள்” என்றார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசும், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதனால் தான் மக்களின் பேராதரவு புரட்சித்தலைவி அம்மாவின் அரசுக்கு தொடர்ந்து நிலைத்து நிற்கின்றது.

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள், பெரும்பாலும் பருவமழையை நம்பியே உள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஆற்று நீரை கொண்டு ஏரி, குளம், குட்டை, ஊரணிகளை நிரப்பி, பின்னர் அந்த நீர், குடிநீர், பாசனம் மற்றும் பிற தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சிக்கு நீர் மேலாண்மை அவசியமானதாகும். பருவமழை பொய்க்கும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்கான நிரந்தரத் தீர்வை காண்பது மிகவும் இன்றியமையாதது. ஒவ்வொரு மழைத்துளியையும், பயன்படுத்தப்பட்ட நீரையும் மறுசுழற்சி செய்து முறையான பயன்பாட்டிற்காக சேமிக்கப்பட வேண்டியது அவசியம்.

“நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருக”, என்ற புறநானூற்று பாடலின் வரிகள், மழை நீரை சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்று கூறுகிறது. அதாவது, நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே சிறந்தவர்கள் என்கிறது.

இந்த புறநானூற்றுப் பாடலின் வரிகளுக்கு ஏற்ப, நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மழைநீர் சேகரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி வெற்றிகண்டார். புரட்சித்தலைவி அம்மாவின் வழியிலேயே மழைநீர் சேகரிப்பை முன்னெடுத்துச் செல்லவும், நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தி பாதுகாக்கவும், வேளாண்மைக்கு நீர் திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்யவும், கழிவுநீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதை பெருமளவில் ஊக்கப்படுத்தவும் “நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம்” என்ற தீவிர மக்கள் இயக்கத்தை 7.8.2019 அன்று நான் துவக்கி வைத்தேன் என்பதை இங்கே பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த தீவிர இயக்கத்தில் மழைநீர் சேகரித்தல், குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகளை பாதுகாத்து அதன் கொள்திறனை அதிகரித்தல், நிலத்தடி நீரை செறிவூட்டி, குடிநீர் வழங்குதலை நிலைப்படுத்துதல், பயன்படுத்தப்பட்ட நீரினை மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நன்னீருக்கான தேவையைக் குறைத்தல், இதன் மூலம் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சிக் கோட்பாட்டினை தீவிரமாக கடைபிடித்தல் போன்ற பல்வேறு வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்ட 1,829 பணிகளும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நீரை சேகரிக்கும் முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாக, காவேரி டெல்டா பகுதியில் உள்ள கால்வாய்களை சீரமைக்க சுமார் ரூபாய் 61 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ள பணிகளும் இந்த தீவிர மக்கள் இயக்கத்தின் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதன் மூலம், பல வருடங்களுக்குப் பிறகு காவேரி டெல்டா பகுதியான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடைமடைப் பகுதிகளில் கூட காவேரி நீர் இவ்வருடம் சென்றடைந்ததோடு மட்டுமல்லாமல், காவேரி டெல்டா மாவட்டங்களில் பாசன கால்வாய்கள் மூலம் நீர் பெறும் ஏரிகள் அனைத்தும் விரைந்து நிரம்பி வருகின்றன. இது அம்மா அவர்கள் அரசின் வரலாற்றுச் சாதனையாகும்.

அது மட்டுமல்லாமல், இத்தீவிர பிரச்சார இயக்கத்தின் மூலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் கிராமந்தோறும் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊரணிகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பணிகளும் ரூபாய் 1,250 கோடி மதிப்பீட்டில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரத்திலுள்ள 210 நீர் நிலைகளில், மாநகராட்சி நிதி மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் மூலமாக 53 நீர் நிலைகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 114 நீர்நிலைகளில் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகளும் இந்த தீவிர இயக்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கத்திற்கு, பொது மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். இந்த இயக்கத்தில் தனியார் நிறுவனங்கள், பொது மக்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அதிக அளவில் பங்கு எடுத்துக் கொண்டு நீர்நிலைகளை தூர்வாரி வருகிறார்கள். எனவே, இந்தத் தீவிர இயக்கத்தின் மூலம் பருவமழை காலத்திற்கு முன்பே நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, அதிக அளவு மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருகி வரும் மக்கள் தொகையை, அதற்கேற்ப பெருகும் நீரின் தேவையினையும் கருத்தில் கொண்டு, இனி நாம் ஒவ்வொருவரும் நீரின் சேமிப்பைப் பற்றி சிந்தித்து, அடுத்த தலைமுறைக்கு வளமான நீர் ஆதாரத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இந்த இயக்கத்தின் நோக்கம். புரட்சித்தலைவி அம்மாவின் அரசின் முக்கிய நோக்கமாகும்.

சென்னை நகருக்கு தொடர்ந்து குடிநீர் வழங்குவதற்கென்று 1978-ம் ஆண்டு புரட்சித்தலைவரால் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் நிறுவப்பட்டது. சென்னை பெருநகர பகுதியின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கேற்ப பாதுகாப்பான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று சேவைகளை இவ்வாரியம் சிறப்பாக செய்து வருகிறது.

புரட்சித்தலைவி அம்மாவின் சீரிய முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின்படி, கடந்த 2003-ம் ஆண்டில் அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு முறைகள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது புரட்சித்தலைவி அம்மாவின் அரசின் ஆணைக்கிணங்க, இந்தத் திட்டத்தை சென்னைக் குடிநீர் வாரியமும், பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முறையாக பராமரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதா என கட்டமைப்புகளை பரிசோதித்து, அவற்றிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், தேவைப்பட்டால் மேம்படுத்தவும் அல்லது விரிவாக்கம் செய்யவும், நுகர்வோர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. இதனால் தற்பொழுது பெய்த மழைக்கு பிறகு, சென்னை மாநகரில் நிலத்தடி நீர் மட்டம் 2 முதல் 5 அடிவரை உயர்ந்துள்ளது.

இரண்டு பருவமழைகளும் பொய்த்தாலும், சென்னை நகர மக்களுக்கு குடிநீரை தடையின்றி வழங்க, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தினை மேற்கொள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2004-ம் ஆண்டு நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்தினை அறிவித்தார். அதன்படி, நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் மீஞ்சூரில் அமைக்கப்பட்டது.

இரண்டாவது நிலையமாக, நெம்மேலியில், நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் சென்னை மாநகரின் குடிநீர் விநியோகத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பருவமழை தேவையான அளவு பொழியாத பொழுது சென்னை மாநகரின், குடிநீர் தேவையை சமாளிக்க, இவ்விரு கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உதவிகரமாக இருந்து வருகிறது.

தற்போது நெம்மேலியில் இயங்கி வரும் நிலையத்திற்கு அருகாமையில், மற்றொரு கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார். அதன்படி, ரூபாய் ஆயிரத்து 259 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகளுக்கு 27.6.2019 அன்று, புரட்சித்தலைவி அம்மாவின் அருளாசியோடு, என்னால் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகரத்தின் குடிநீர் ஆதாரத்திற்கு ஓர் நிரந்தர தீர்வாக இதயத் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூர் என்ற இடத்தில் ரூபாய் 6 ஆயிரத்து 78 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பருவ மழை காலங்களில் பெறப்படும் மழை நீர் கடலில் கலந்து வீணாவதை தவிர்க்கும் பொருட்டும், மழை நீரை சேமித்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் கண்ணன்கோட்டை– தேர்வாய்கண்டிகை என்ற இடத்தில் வருடத்திற்கு 1000 மில்லியன் கன அடி கொள்ளளவு நீரை சேமிக்கும் வகையில் நீர்தேக்கத்தை அமைக்கும் பணி புரட்சித்தலைவி அம்மாவின் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

கழிவுநீர் மறுசுழற்சி மூலமாக தொழிற்சாலைகளுக்கு நாளொன்றுக்கு சுமார் 36 மில்லியன் லிட்டர் நீர் வழங்கும் முறை 1993-ம் ஆண்டே புரட்சித்தலைவி அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்டு, தற்பொழுது தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. இதன் தொடர் நடவடிக்கையாக, வடசென்னை பகுதியிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்க, கொடுங்கையூரில் ரூபாய் 348 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று என்னால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, கோயம்பேடு பகுதியில் மேலும் ஒரு 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது விரைவில் முடியும் தருவாயில் உள்ளது.இதன் மூலம் வடசென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலை தேவைகளுக்கு தினசரி 40 மில்லியன் லிட்டர் நன்னீருக்குப் பதிலாக கழிவுநீரை சுத்திகரித்து வழங்கப்பட உள்ளது. இவ்விரு நிலையங்கள் பயன்பாட்டிற்கு வரும்பொழுது, சென்னை மாநகரில் மொத்தமாக உருவாகும் கழிவுநீரில் 20 சதவீதம் அளவிற்கு மறு சுழற்சி செய்யப்படும். இதன் மூலம் நாட்டிலேயே அதிகபட்சமாக கழிவுநீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழும் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

நான் சமீபத்தில் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சென்ற பொழுது, அங்கே அமைந்துள்ள கழிவுநீரை மறுசுழற்சி செய்து கழிப்பறை, தோட்டங்கள், மரங்களுக்கு நீர் பாசனம் செய்யவும், ஏரிகளில் தேக்கி நிலத்தடி நீரை செறிவூட்டி, அந்த நிலத்தடி நீரை குடிநீருக்கும் பயன்படுத்துவதையும் பார்த்தேன். இதுபோன்று கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்தால், சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் நன்னீர் தேவை குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும்.

இதே தொழில்நுட்பத்தில் அம்மாவின் அரசு நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் நாளொன்றுக்கு தலா 10 மில்லியன் லிட்டர் இரண்டாம் நிலை கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கு, புரட்சித்தலைவி அம்மாவின் அரசு இப்பொழுது நடவடிக்கை எடுத்து வருகிறது. இனி புதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுகின்றபோது நீரை மறுசுழற்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கு சுத்திகரிப்பு நிலையத்தினை உருவாக்கினால் தான் அனுமதியே வழங்கப்படும் என்ற ஒரு விதி விரைவில் உருவாக்கப்பட உள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நன்னீரைப் பாதுகாக்கும் பொருட்டு, கழிவுநீரை சுத்திகரித்துப் பயன்படுத்துவதற்கான இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு அம்மாவின் அரசு தொடர்ந்து ஊக்கமளிக்கும். புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் எனது சீரிய முயற்சியால் சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கண்டலேறு அணை 25.9.2019 அன்று திறக்கப்பட்டது. தற்போது இந்த நீர், பூண்டி நீர் தேக்கத்தை வந்தடைந்துள்ளது. எனவே, சென்னை நகர மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்படும் என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர் அவர்கள். சென்னை மக்களின் தாகம் தீர்க்க, வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். மழைநீர் சேகரிப்பு என்ற உன்னதமான திட்டத்தை தந்து, அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியதும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான்.

தற்போது குடிமராமத்து திட்டம், நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம், பேரூர் மற்றும் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள், கண்ணன்கோட்டை– தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம், கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில் கழிவு நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டம் ஆகிய முன்னோடி திட்டங்களை நிறைவேற்றி வருவதும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தான் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

சென்னை நகரின் மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக தொலை நோக்கு பார்வையுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தீட்டியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். இயற்கை பொய்த்தாலும், சென்னை நகர மக்களுக்கு உரிய குடிநீரை தங்கு தடையின்றி இன்றும் வழங்கி வரும் அரசும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் என்பதை இங்கே ஆணித்தரமாக எடுத்துரைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

கிருஷ்ணா நதியிலிருந்து வருகின்ற நீர் பல இடங்களில் வீணாகிறது. ஆகவே, கண்டலேறுவிலிருந்து திறக்கப்படுகின்ற நீர் முழுமையாக பூண்டி ஏரிக்கு வருவதற்கு அரசே இன்றைக்கு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க இருக்கின்றது. கண்டலேறுவிலிருந்து குழாய் மூலமாக பூண்டிக்கு தண்ணீரைக் கொண்டு வருகின்றபொழுது, கண்டலேறு ஏரியிலிருந்து திறக்கப்படுகின்ற நீர் எவ்வித சேதாரமும் இல்லாமல் முழுமையாக பூண்டி ஏரிக்கு வந்தடையும். அவ்வாறு வந்தடைகின்ற பொழுது நமக்கு முழுமையாக நீர் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு அரசினுடைய பரிசீலனையில் இருக்கின்றது என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். தமிழ்நாட்டை நீர்வளம் மிக்க மாநிலமாக மாற்றிக் கொண்டு இருப்பதும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் என்பதை உறுதியிட்டு கூற விரும்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.