சிறப்பு செய்திகள்

கழிவுநீரை மறுசுழற்சி செய்வதில் தமிழ்நாடு வரலாறு படைக்கும் – துணை முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

இந்தியாவிலேயே கழிவுநீரை மறுசுழற்சி செய்வதில் தமிழகம் வரலாறு படைக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பாக கொடுங்கையூரில் ரூ.348 கோடி மதிப்பீட்டிலான செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் துவக்க விழா  நடைபெற்றது. இந்த விழாவில்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:- 

தண்ணீர் என்பது இறைவன் நமக்களித்த வரம்! இயற்கை நமக்கு வழங்கிடும் கொடை! “மழையிலிருந்து உணவு உண்டாகிறது, உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன”- என்கிறது, பகவத்கீதை.

“தண்ணீரிலிருந்து நாம் அனைத்து
உயிரினங்களையும் படைத்தோம்”
– என்பது, திருக்குர்ஆனில் அல்லா அருளிய இறைமொழியாகும்.

“பூமியானது, நீரிலிருந்து நீரினால் உண்டாக்கப்பட்டுள்ளது”
– என்கிறது, புனித விவிலியம்.

உலகப் பொதுமறையான திருக்குறள்,  “உலகத்து வாழும் உயிர்களுக்கெல்லாம் அமிழ்தம்” என்று தண்ணீரை போற்றுகிறது. அதனால்தான், வள்ளுவப் பெருமான், அந்த “நீரின்றி அமையாது உலகு” என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறுகிறார்.

தண்ணீரின் பயன்பாடுகளை எடுத்துக்கூற வந்த வள்ளுவர், வேளாண் தொழிலுக்கு அடிப்படை நீர் என்று கூறுவதோடு, நம்முடைய உடலை தூய்மைப்படுத்துவதும் தண்ணீர் என்று, “புறந்தூய்மை நீரான் அமையும்” என்று, அதன் அடுத்த பயன்பாட்டை விளக்குகிறார். இதனினும் விரிந்த பயன்பாடாக, இன்று நவீன உலகின் வணிக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் நீரை வெகுவாக பயன்படுத்துகின்றன.

இவ்வாறு, மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் கழிப்பறை, குளியலறை, சமையலறை ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டும், வணிக நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்திய பின்னும், மாசு அடைந்த தண்ணீர், கழிவு நீராக வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசுப்படாமல் தடுக்க வேண்டியதும், அந்த கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, முறையாக மறுசுழற்சி செய்து, பயன்படுத்த வேண்டியதும், இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இதை உணர்ந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள், 2014-ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில், “எனது தலைமையிலான அரசு, தொழிற்சாலைகளின் உபயோகத்திற்கு நன்னீருக்கு பதிலாக மறுசுழற்சி செய்யப்பட்ட மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை உபயோகப்படுத்துதலை ஊக்குவிக்க உள்ளது” என்று விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

இதற்கு முன்னோட்டமாக 1993-ம் ஆண்டிலேயே சென்னை மாநகரில் அமைந்திருந்த சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து 2-ம் நிலை சுத்திகரிப்பு முறையால் வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நாள் ஒன்றுக்கு 36 மில்லியன் லிட்டர் நீர் வழங்கிட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழிவகை செய்தார். அது தற்போதும் பயன்பாட்டில் இருந்து வருகிறது என்பதை பெருமையுடன் எடுத்துக் கூற விரும்புகிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்திய திருநாட்டிற்கே முன்னோடியாகவும், ஏனைய மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த புதுமைத் திட்டத்தை அறிவித்தார்.

இதன்படி, சென்னை மாநகரிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், பெருகிவரும் தொழிற்சாலைகளுக்கு, தொடர்ந்து நீர் வழங்கும் பொருட்டு, இத்திட்டத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தி, கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில், தலா 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு டி.டி.ஆர்.ஓ. எனப்படும் உலக தரம் வாய்ந்த மூன்றாம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க, அம்மா அவர்கள் ஆணையிட்டார்.

இந்த ஆணையின்படி வடசென்னையில் மணலி, மீஞ்சூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின்சார வாரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்க கொடுங்கையூரில் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட எதிர் சவ்வூடு பரவல் முறையிலான, மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் ரூ.348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டு, அதன்படி நிறுவப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை, அம்மா அவர்களின் வழிநடக்கும் அரசை வழி நடத்தும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறார்.

இங்கு தொடங்கப்படும் இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் வடசென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக தினசரி 40 மில்லியன் லிட்டர், மூன்றாம் நிலையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், தற்போது வழங்கப்பட்டு வரும் நன்னீருக்கு பதிலாக வழங்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நன்னீர், சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவந்த பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விரு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் பயன்பாட்டிற்கு வரும்பொழுது சென்னை மாநகரில் மொத்தமாக உருவாகும் கழிவுநீரில் 20 சதவீதம் அளவிற்கு மறு சுழற்சி செய்யப்படும். இதன் மூலம் நாட்டிலேயே அதிகபட்சமாக கழிவுநீரை மறு சுழற்சி செய்யும் மாநிலமாகத் தமிழ்நாடு வரலாறு படைக்கும். மக்களுக்கு அளிக்கின்ற வாக்குறுதிகள் புனிதமானவை என்று அம்மா அவர்கள் எப்போதுமே கூறுவார்கள்.

அதை நிறைவேற்ற எந்தவிதமான தடை வந்தாலும் அதை தகர்த்து 100 விழுக்காடு உழைப்பை நல்கி அந்த வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்றினார். அம்மா அவர்கள் வகுத்து தந்த வழியில் தான் மக்களுக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 348 கோடி மதிப்பீட்டிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அம்மா அவர்களின் வழியில் பயணம் மேற்கொண்டு மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக வெற்றிகரமாக நிறைவேற்றுகின்ற அம்மா அவர்களது அரசை, தமிழ்நாடே பாராட்டிக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் பாராட்டி கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை எவ்வளவு செயல்படுத்தினாலும், அதை குறை கூறுகின்றவர்களும், குற்றம் சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை பற்றி எண்ணும் போது, அண்மையில் நான் படித்த, பாலைவனத்தை கடந்த இரண்டு நண்பர்களின் கதை ஒன்று, என் நினைவுக்கு வருகிறது.

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும், நண்பர்கள்தான் என்றாலும், தொழில் முறையில் ஒருவர் பணக்காரர், முதலாளி. இன்னொருவர் அவருக்கு கீழே பணியாற்றும் தொழிலாளி, ஏழை. இரண்டு பேர்களும், ஒரு முறை தங்களது வியாபார விஷயமாக போகும் போது, ஒரு பாலைவனத்தை கடந்து செல்ல வேண்டியதாயிற்று.

அப்படி பாலைவனத்தில் போய்கொண்டிருந்த போது, மதியம் சாப்பிட வேண்டிய நேரம் வந்தது. இருவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்த நேரத்தில், பணக்காரனின் சிந்தனையில், தான் என்னும் அகந்தை துளிர்விட்டது. உடனே ஏழை தொழிலாளியை பார்த்து, அவன் தனது நண்பன் என்பதையும் மறந்து, “கொஞ்சம் பொறு, நான் முதலில் சாப்பிட்டு விடுகிறேன். பிறகு நீ சாப்பிடலாம்” என்று தனது பணக்கார தோரணையை காட்டினான்.

அதை புரிந்து கொள்ளாத ஏழை, “ஏன், நாம் சேர்ந்து சாப்பிட்டால் என்ன?” என்று கேட்டதும், கோபம் தலைக்கேறி ஏழையின் மனம் நோகும்படி மிகக் கடுமையான வார்த்தைகளால் ஏசினான். இந்த சுடுசொற்களை கேட்ட ஏழை, தனது இயலாமையால் மனம் வருந்தி, “இன்று எனது நண்பன் என்னை கண்டபடி திட்டி மனம் நோகச் செய்துவிட்டான்” என்று அந்த பாலைவன மணலில் எழுதி வைத்துவிட்டு நடந்தான்.

கொஞ்ச தூரம் சென்றதும், முன்னால் போய் கொண்டிருந்த முதலாளிக்கு தாகம் எடுக்க ஆரம்பித்தது. உடனே தண்ணீர் குடிக்க குடுவையை எடுத்தபோது, அதில் தண்ணீர் தீர்ந்து விட்டதை அறிந்தான். பின்னால் வந்து கொண்டிருந்த ஏழை தொழிலாளியிடம், உன் குடுவையில் தண்ணீர் இருக்கிறதா, என்று கேட்டான் அவனது தண்ணீரும் தீர்ந்து விட்டிருந்தது.

தாகம் வாட்டி எடுக்க அப்படியே நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஓரிடத்தில் தண்ணீர் இருப்பதை கண்ட பணக்காரன், ஓடிச் சென்று குடிக்க முற்பட்டான். அப்போது, திடீரென தன்னை பின் தொடர்ந்து வரும் நண்பனை பற்றிய நினைவு அவனுக்கு வந்தது.

இவ்வளவு காலம் நன்றாக பழகிய நண்பனை, கடுமையான வார்த்தைகளால் மனம் நோக வைத்து விட்டோமே என்று வருந்தி, மனம் திருந்தி, சத்தமிட்டு அவனை அழைத்து அந்த தண்ணீரை இருவரும் பகிர்ந்து உண்டு தாகம் தீர்த்துக் கொண்டார்கள்.
உடனே அந்த ஏழை நண்பன், அங்கிருந்த ஒரு கல்லில், “என் நண்பன் இன்று மறக்கமுடியாத ஒரு உதவி செய்தான்” என்று எழுதினான்.

அப்போது, இவர்களை தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு பாலைவன தேவதை, அவன் முன் தோன்றி, “அவன் உன் மீது கடுமையான வார்த்தைகளை வீசி நோகடித்த போது, மணலில் எழுதி வைத்தாய், உதவி செய்த போது கல்லில் எழுதி வைக்கிறாய், அது ஏன்?” என்று கேட்டது.

அதற்கு அந்த ஏழை நண்பன், “செய்த நன்றியை என்றும் மறக்கக்கூடாது என்று கல்லில் எழுதி வைத்தேன். என்னை குறை கூறி கடுஞ்சொற்களால் சொன்ன வார்த்தைகள், காற்றோடு போக வேண்டியவை. அதனால் மணலில் எழுதி வைத்தேன்” என்று சொன்னான். அதைப் போல, எதிர்கட்சிகள் நம்மைப் பார்த்து கூறுகின்ற குறைகளும், குற்றச்சாட்டுகளும், மணலில் எழுதப்படும் ! அவை காற்றோடு கரைந்து போகும்!

“மக்களால் நான், மக்களுக்காக நான்” என்று மக்களுக்காகவே உழைத்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா நிகழ்த்திய சரித்திர சாதனைகளும், அம்மா அவர்களின் ஆட்சியில் படைக்கின்ற சாதனைகளும், அதனால் மக்கள் பெறுகின்ற பயன்களும், கல்லில் எழுதி வைக்கப்படும்! காலமெல்லாம் நிலைத்து நிற்கும்!

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.