சிறப்பு செய்திகள்

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – கழக வேட்பாளர்கள் மனு தாக்கல்

சென்னை

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில் கழக வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, டாக்டர் மு.தம்பிதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதேபோல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கே.பி.முனுசாமி, டாக்டர் மு.தம்பிதுரை ஆகியோர் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை செயலாளருமான கே.சீனிவாசனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அதன் தலைவர் ஜி.கே.வாசனும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் நேற்று தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை செயலாளருமான கே.சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எஸ்.ஞானதேசிகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.