தற்போதைய செய்திகள்

தமிழகத்திற்கு 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு

சென்னை

தமிழகத்திற்கு ராபி பருவத்திற்கு தேவையான 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:- 

அம்மாவின் அரசு வேளாண் உற்பத்தியை உயர்த்துவதற்கு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாதத்திலும் சாகுபடி செய்யப்படும் பயிருக்கு தேவையான அளவு யூரியாவினை சம்பந்தப்பட்ட உர நிறுவனங்களிடமிருந்து பெற்று, இருப்பில் வைத்து வேளாண் பெருமக்களுக்கு விநியோகிக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, நடப்பாண்டில் வேளாண் பெருமக்களுக்கு தேவையான அனைத்து ரசாயன உரங்களையும் இருப்பில் வைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, காரிப் பருவத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை), இதுவரை 6.46 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் முதல் 2020-ம் ஆண்டு மார்ச் வரையிலான ராபி பருவத்திற்கு மொத்தமாக 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முழு யூரியா உரத் தேவையினையும் எந்தவித குறைபாடும் இன்றி, முழுமையாக வழங்கிட மத்திய அரசிடம் அம்மாவின் அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்தது.

தமிழ்நாடு அரசின் இக்கோரிக்கையினை ஏற்று, 11.9.2019 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான ராபி பருவ இடுபொருள் மாநாட்டில் தமிழ்நாட்டிற்கு 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரத்தினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் 1.74 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரம் உடனடி விநியோகத்திற்கு இருப்பில் உள்ளது.

45 கிலோ எடையுள்ள யூரியா மூடையின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.266.50 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. விவசாயிகளுக்கு தரமான உரங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதனை வேளாண்மைத்துறையும், கூட்டுறவுத்துறையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

மேலும், விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘உழவன் கைபேசி’ செயலி மூலம் விவசாயிகள் அருகில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் உள்ள உர இருப்பை அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையினை எடுத்துச் சென்று அருகில் உள்ள உர விற்பனை நிலையங்களில் தேவையான உரங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.