மற்றவை

புதிய தேர்தல் வியூகம் அமைத்து தி.மு.க. சதியை முறியடிப்போம் – அமைச்சர் சி.வி.சண்முகம் சூளுரை

விழுப்புரம்:-

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக திட்டங்களை முறியடிக்க அதிமுகவினர் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும் என விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசினார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அறிமுகம் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கி பேசியதாவது:-

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 100 கருணாநிதி வந்தாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது. எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்ற கனவில் தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் தோல்வி அடைய மக்கள் அளித்த ஓட்டு இல்லை. அப்படியிருந்தால் இடைத்தேர்தலில் 23 தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருப்போம். நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்து விடும். அதனால் இதில் நாம் வெற்றி பெற வேண்டும். 100 ஆண்டுகள் ஆனாலும் விக்கிரவாண்டியில் நீதிமன்றம் வந்திருக்க வாய்ப்பு இல்லை. பாராட்ட மனம் இல்லாதவர்கள் தேர்தல் விதிமீறல் புகார் கொடுக்கின்றனர்.

நாங்கள் வழக்கு போட்டால் நீங்கள் தாங்க முடியாது. தேர்தலில் திமுக சதித் திட்டங்களை முறியடிக்க கழகம் புதிய தேர்தல் வியூகம் அமைத்து செயல்படும். கழக அரசின் சாதனைகளை நிர்வாகிகள் திண்ணை பிரசாரம் மூலம் மக்களிடையே எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், தி.மு.க.வை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. வேலூர் தோல்வியை நமக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. சரியாக பணியாற்றினால் நாம் தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என்றார்.

முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை பேசுகையில், தமிழகத்தில் எந்த ஒரு முதல்வரின் மகனும் முதல்வராக வந்ததாக சரித்திரம் இல்லை. அதனால் ஸ்டாலின் முதல்வராக வரவே முடியாது. விக்கிரவாண்டி தொகுதி எப்போதும் கழகத்தின் கோட்டை. கழக ஆட்சி பல ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்க விக்கிரவாண்டி தொகுதி வெற்றி முக்கியம். அது உங்கள் கையில் உள்ளது என்றார்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மாவின் ஆத்மா இருக்கும் வரை கழகத்தை யாராலும் அழிக்க முடியாது. எதிர்க்கட்சிக்காரர்கள் தளபதி என ஸ்டாலினுக்கு பேர் வைத்துள்ளனர். அவர் ஒரு போதும் தலைவராக முடியாது என்றார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், விக்கிரவாண்டி தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்பது வரலாறு. எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் திட்டங்கள் எதுவும் நடைபெறாது. கழகம் வெற்றி பெற்றால் திட்டங்கள் தொடரும். திமுகவிற்கு இந்த தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.