தற்போதைய செய்திகள்

படிக்கும் போதே போட்டி தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுரை…

நாகப்பட்டினம்

படிக்கும் போதே போட்டி தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுரை வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, தருமபுரம் ஆதினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 823 பணிநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சீ.சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மா வழியில் தமிழக அரசு மக்களின் ஏற்றமிகு வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களிடத்தில் கல்வியறிவின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கல்வி வளர்ச்சியிலும், மனிதவள மேம்பாட்டிலும், முதன்மையான மாநிலமாக உள்ளது.

புரட்சித்தலைவி அம்மா கல்வி வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதும். மற்ற அனைத்தையும் அரசே வழங்கிடும் வகையில் பல அரிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பை, வரைபடம், நோட்டு, சைக்கிள், சீருடை, காலனி, போன்ற அனைத்தையும் வழங்கினார். அம்மா வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் கல்வி வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

மாணவர்கள் தாங்கள் கற்கப்போகும் கல்வியைத் தேர்வு செய்வது என்பது மிகவும் கவனமுடன் செய்ய வேண்டிய ஒன்றாகும். பள்ளி, கல்லூரி படிப்பில் நாம் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இன்றைய காலகட்டத்தில் நம் கல்வித்தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கும் துறை சார்ந்த படிப்பினை தேர்வு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு நம்மைச்சுற்றி ஏராளமாக உள்ளது. படிக்கும் போதே இளைஞர்கள் அரசு போட்டித் தேர்விற்கு தயாராக வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதுகேளாதோரை குறைபாடற்றவர் திருமணம் செய்து கொள்பவருக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கும், கை, கால் பாதிக்கப்பட்டோரை குறைபாடற்றவர் திருமணம் செய்து கொள்பவருக்கு திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கும் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.7,25,000 மதிப்பிலான திருமண உதவித்தொகை ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், தற்போது 27 பயனாளிகளுக்கும் தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.8,10,000 மதிப்பிலான தங்கத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

இம்முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள் பூம்புகார் எஸ்.பவுன்ராஜ், சீர்காழி பி.வி.பாரதி, மயிலாடுதுறை வி.ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் இ.கண்மணி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மு.ஹேமலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சந்திரமோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டனர்.