தற்போதைய செய்திகள்

இனிமேலும் தி.மு.க.வின் போலியான வாக்குறுதிகளை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் – கழக இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி பேச்சு

காஞ்சிபுரம்

இனிமேலும் தி.மு.க.வின் போலியான வாக்குறுதிகளை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்று கழக இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி பேசினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியக் கழகத்தின் சார்பில் குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் கே.பழனி ஏற்பாட்டில் மலையம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கழக இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி, ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்புச் செயலாளர் வி.சோமசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் கழக இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விவசாயிகளுக்கு பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தினார். அதற்காக டெல்டா விவசாயிகள் புரட்சித்தலைவி அம்மாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். தற்போது காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்ததையடுத்து விவசாயிகள் மனதார பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் ஏதோ ஏதோ உளறி வருகிறார். மறைந்த தி.மு.க.வின் பொதுச் செயலாளர் அன்பழகனின் உடலை பொதுமக்கள் பார்வைக்காக அண்ணா அறிவாலயத்தில் வைக்காமல் எங்கோ ஒரு மூலையில் வைத்து அடக்கம் செய்துவிட்டனர். இது மிகப்பெரிய தவறு என்று தி.மு.க.வினர் புலம்புகின்றனர்.

தி.மு.க.வில் உள்ள மூத்த தலைவருக்கே இந்த நிலை என்றால் தி.மு.க.வில் உள்ள சாதாரண தொண்டர்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதனை தி.மு.க. தொண்டர்கள் தற்போது நினைத்து வேதனைப்படத் தொடங்கி விட்டனர். கழக அரசின் திட்டங்கள் ஏழை எளியவர்களை சென்றடைந்துள்ளன.

இனிமேலும் தி.மு.க.வின் போலியான வாக்குறுதிகளை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். மக்கள் தெளிவாக உள்ளார்கள். அதற்கு எடுத்துக்காட்டு தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களை கூறலாம். வருகின்ற உள்ளாட்சித்தேர்தலில் மாபெரும் வெற்றியினை பெறுவோம். 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 3-வது முறையாக கழக அரசு வெற்றி பெற்றிட அம்மாவின் 72-வது பிறந்தநாளான இந்நாளில் உறுதிகொள்வோம். வென்று முடிப்போம்.

இவ்வாறு கழக இலக்கிய அணிச்செயலாளர் பா.வளர்மதி பேசினார்.

கூட்டத்தில் கழக நிர்வாகிகள் எழிச்சூர் இ.வி.ராமச்சந்திரன், போந்தூர் செந்தில்ராஜன், எஸ்.சிவக்குமார், ரேவதாட்சாயிணிசுந்தர்ராஜன், டாக்டர் கே.பி.யேசுபாதம், எறையூர் இ.பி.முனுசாமி, தமிழ்செல்வன், வெங்காடு உலகநாதன், ஏ.என்.இ.பூபதி, இரா.அலெக்சாண்டர், எம்.பிரேம்சேகர், எஸ்.சேகர், எஸ்.தமிழ்செல்வன், ஓ.ராஜமாணிக்கம், அற்புதமேரி தமிழ்தாசன், குன்றத்தூர் சுந்தரம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூட்ட முடிவில் அம்மா பேரவை து.நாகராஜன் நன்றி கூறினார்.